பக்கம் எண் :

விடையருள் படலம்1351

(வி - ம்.) சிலதியர் - பணிமகளிர். அமளி - பாயல். தேவர்கள் நோக்கான் இன்ப நுகர்வர் என்பது தோன்ற உருவாலின்பம் விளைத்து என்றார்.

(261)

 சென்றமுந் நாளும் வெவ்வே றுருக்கொடு திளைத்தா யென்னே
 என்றமா துவப்ப வண்ண லிறுக்குமம் மூவர் மாட்டும்
 ஒன்றுவித் துலகோர் மாதை யுறுவது முறையால் யாமே
 மன்றலங் குழலா யன்னார் வடிவெடுத் தமர்ந்தா மென்றான்.

(இ - ள்.) வள்ளிநாயகியார் "பெருமானே ! சென்ற மூன்று நாளும் வெவ்வேறு வடிவங்கொண்டு தழுவினை அதற்குக் காரணம் யாதென வினவ, அந்நாயகியார் மனமுவக்கும்படி பெருமான் "தேவீ ! உலகினர் அம் முதல் மூன்று நாளும் தம் மனைவியரை அத்தெய்வங்களோடு புணர்வித்துப் பின்னரே தாமருவுவது வேத முறையாகும். ஆதலால் அவ்வேதமுறை நன்கு மதிக்கப்படல் வேண்டும் என்று யாமே அத்தெய்வங்களாகித் தழுவினேங்காண் என்று
விளக்கியருளினன்.

(வி - ம்.) மாது - வள்ளி. இறுக்கும் - விடைகூறுவான். மூவர் திங்கள், கந்தருவன் தீ என்னு மூவர். ஆல் : அசை. அமர்ந்தாம் : இடக்கரடக்கு.

(262)

 திருமணம் புரிந்து வைவேற் சேவக னுலகுக் கெல்லாம்
 பெருகுமங் கலங்கள் செய்த பெற்றியிற் றன்னஞ் சொற்றாம்
 உருகிய முழுவ லன்பி னுறுவர்கா ளமரர்ப் போக்கிக்
 கருணையங் கடவுண் மாதர் கடாவிடை நடாவல் செய்வாம்.

(இ - ள்.) நெகிழ்ந்த உழுவலன்புடைய துறவீரே ! இதுகாறும் கூர்த்த வேற்படையினையுடைய முருகப்பெருமான் உலகங்கள் எல்லாம் உய்யும் பொருட்டுப் பெரிய திருமண விழாச் செய்த செய்தியைச் சிறிது கூறினேம். இனிப் பேரருட் பிழம்பாகிய அப்பெருமான் தேவர்களைப் போக்கி மாதரோடு நிகழ்த்திய வினாவிடையினைக் கூறுவேம் கேண்மின்.

(வி - ம்.) தான் திருமணஞ் செய்து இல்லறத் தமர்தல் எல்லா வுயிர்களும் அங்ஙனம் ஆணும் பெண்ணுமாய் அறத்தமர்ந்து இன்புறுதற் பொருட்டாகலின் "உலகுக் கெல்லாம் பெருகு மங்கலங்கள் செய்த பெற்றி" என்றார். கடா - வினா.

(263)

வள்ளிநாயகி திருமணப் படலம்

முற்றிற்று.