பக்கம் எண் :

1354தணிகைப் புராணம்

 மாமன்மொ ழிக்கெதிர் நாம வேலான்
           வாமம ணிநகை கொண்டு சொல்வான்
 ஏமநெ டும்புவிக் கின்ப நல்க
           வென்றுமிவ் வெற்பையி ருக்கை கொண்டாம்
 மாமது சேர்ந்துமுப் போது நிச்ச
           மாகண்ட லன்மலர் நீலம் பூப்பக்
 காமரு கற்சுனை யாக்கி யிட்டான்
           காண்மதி யத்தையென் றீதும் விண்டான்.

(இ - ள்.) தன் திருமாமனாகிய நம்பிமன்னன் வேண்டுகோட்கு மறுமொழியாக எம்பெருமான் அழகிய முத்துப் போன்று புன்முறுவல் பூத்துக் கூறுபவன் பாதுகாவலமைந்த நெடிய இந்நிலவுலகிற்குப் பேரின்ப நல்கும்பொருட்டு எக்காலமும் இத்திருத்தணிகை மலையை யாம் எம்மிருக்கையாகக் கைக்கொண்டுவிட்டேம். "மன்னனே ! சிறந்த தேனை யுட்கொண்டு மலராநின்ற செங்கழுநீர் முப்பொழுதும் மலரும் படி இந்திரன் அழகிய இக்கற்சுனையைப் படைத்து வைத்துளன் அதோ அதனை நீயும் காண்பாயாகவென்று காட்டிப் (பின்வரும்) இம்மொழியையும் திருவாய் மலர்ந்தருளினன்.

(வி - ம்.) மாமன் - நம்பி மன்னன். வாமம் - அழகு, மணி - முத்து. முப்பொழுது - மூன்று பொழுது, காலை மாலை நண்பகல். மூன்று மலருமாம். மதி : முன்னிலையசை. அத்தை - அதனை; அசைச் சொல்லுமாம்.

(5)

 முச்சக முந்தொழு தேத்த வள்ளி
           மூரிவி லங்கலஞ் சாரல்வைகி
 நிச்சமு மில்லற மோம்பி வாழ்தி
           நீடிய வாயுளந் தித்த காலைப்
 பொச்சமி லெம்முல கெய்தி மீளாப்
           போகந்தி ளைத்தருள் சேர்தி யென்று
 கச்சமில் பேரரு ணல்கி விட்டான்
           கானவன் கைதொழு தேகு கின்றான்.

(இ - ள்.) மூன்றுலகமும் நின்னைத் தொழுது பாராட்டும்படி பெரிய வள்ளி மலைச்சாரலின்கண் இருந்து நாடோறும் இல்லறத்தை இனிது நடத்தி நன்கு வாழ்வாயாக ! மேலும் நீண்ட நின் ஆயுள் முடிவுற்றபொழுது பொய்மையில்லாத எம்முடைய உலகை யடைந்து ஆண்டு மீள்தலில்லாத பேரின்பத்தை நுகர்ந்திருந்து திருவருளைச் சேர்வாயாக என்று எல்லையற்ற பேரருளையும் வழங்கி விடைகொடுத்தருளினன். நம்பி மன்னன் வணங்கிச் செல்கின்றவன்.

(வி - ம்.) மூரி - பெரிய. நிச்சமும் - நாடோறும். அந்தித்தல் - முடிதல். பொச்சம் - பொய். கச்சம் - அளவு. கானவன் - நம்பி.

(6)