பக்கம் எண் :

1356தணிகைப் புராணம்

(இ - ள்.) அமரர்கள் தொழா நின்ற தகுதியுடைய தேவயானையார் அடிவீழ்ந்த வள்ளி நாயகியாரைத் தழுவி எடுத்துத் திருமேனியைத் தடவி "என் தங்கையே ! நீ எனக்குச் சிறந்த உடன்பிறந்தாளாக வந்தனை, வாழ்க ! என்று உடன்பிறப் பன்பினாலே வாழ்த்துக் கூறிப் பின்னர் எம்பெருமானை வணங்கி.

(வி - ம்.) தழுவினள் - முற்றெச்சம். விழுமிய - சிறந்த. யானை - தேவயானை. துணைவன் - முருகன். அரோ : அசை.

(9)

 யாரிவள் வேடர்தஞ் சார்பி லெய்துறுங்
 காரணம் யாதிவட் கரைதி யென்னலும்
 வாரணம் வளர்த்தவள் வதன நோக்குபு
 வாரண முயர்த்தவன் மகிழ்ந்து கூறுவான்.

(இ - ள்.) எம்பெருமானே ! இவள் யார், இவள் வேடருடைய சார்பிலே வளர்ந்தமைக்குக் காரணம் யாது ? இவள் வரலாற்றினை எனக்குக் கூறியருள்க ! என்று இரத்தலும், கோழிக்கொடியை யுயர்த்த அப்பெருமான், தேவயானையார் திருமுகநோக்கி மகிழ்ந்து கூறுபவன்.

(வி - ம்.) கரைதி - கூறுக. வாரணம் - யானை ; கோழிச்சேவல்.

(10)

 மருமலர்த் துளவினான் மகளி ராகமுன்
 இருவருந் தோற்றினி ரெம்மை மன்றலிற்
 பொருநிய சரவணப் பொய்கை மேவியங்
 கொருவரும் பெருந்தவ முழந்து வைகினீர்.

(இ - ள்.) அன்புடையோய் கூறுதும் கேள் ! மணமுடைய துளவ மாலையணிந்த திருமாலின் மகளிராக நீயிர் இருவீரும் முற்பிறப்பிலே தோன்றியிருந்தீர். இருவீரும் எம்மைத் திருமணத்தின் வாயிலாய்ச்சேர்தற்கு விரும்பிச் சரவணப் பொய்கை மருங்கே சென்று ஒழிவில்லாத பெரிய தவத்தினை
மேற்கொண்டிருந்தீர்.

(வி - ம்.) மறு - மணம். பொருநிய - பொருந்த. ஒருவரும் -
நீங்குதலில்லாத.

(11)

 ஆவயி னும்மையா மடுத்து விண்ணவர்
 காவலன் மகளெனக் கான வேட்டுவன்
 மேவரு மகளென மேக வென்றனம்
 ஏவியாங் கிருவிரு மெய்தி வைகினீர்.

(இ - ள்.) அவ்விடத்தே யாம் நும்பாலெய்தி நீயிரிருவீரும் இந்திரன் மகளாகவும் வேடன் மகளாகவும் ஆகுதிர் என்று கூறினேம். நீயிரும் சென்று அங்ஙனமே அவ்விடங்களிலே எய்தியிருந்தீர்.

(வி - ம்.) ஆவயின் - அவ்விடத்து. விண்ணவர் காவலன் - இந்திரன். மேவருமகள் - பெறலருமகள். மேக - மேவுக.

(12)