பக்கம் எண் :

விடையருள் படலம்1357

 திருப்பரங் குன்றிடைச் செல்வி நின்னுளக்
 கருத்தினை முடித்தனங் களவி னீங்கிவள்
 அருப்பிளம் பூண்முலை யணைந்து மன்றலிப்
 பொருப்பிடை யாற்றினாம் புலவர் போற்றவே.

(இ - ள்.) எம் செல்வம் போன்றவளே ! திருப்பரங்குன்றத்தின் கண் நின் நெஞ்சக் கருத்தினை நிறைவேற்றினேம். தேவர்கள் போற்றும்படி களவொழுக்கத்தானே இவ் வள்ளிநாயகியின் அரும்புபோன்ற பூணணிந்த முலையினை யணைந்து அதன் வழித்தாகிய வரைவினை இத் திருத்தணிகை மலையின்கண் நிகழ்த்தினேம்.

(வி - ம்.) செல்வி : விளி. இவள் - வள்ளி.

(13)

 நீயொரு குழவியாய்த் தவழ்ந்து நேர்செலக்
 காயிலை வயிரவேற் கடவு ணாயகன்
 பாயிருங் கடம்பொழி பகட்டை யேவலும்
 ஆயிடை யதுநினை வளர்த்த தாயிழாய்.

(இ - ள்.) ஆராய்ந்த அணிகலன்களையுடையோய் ! நீ ஒரு பச்சிளங் குழவியாகித் தவழ்ந்து தன்னெதிரே செல்லுதலைக் கண்ட சினக்கும் இலையமைந்த வச்சிரப் படையையுடைய அமரர் கோமான், பாயாநின்ற கரிய மதம் பொழியா நின்ற தமது வெள்ளையானை நின்னைக் கைக்கொண்டு வளர்த்தது.

(வி - ம்.) வயிரவேல் - வச்சிரப்படை. கடவுணாயகன் - இந்திரன். பகடு - ஐராவதம்.

(14)

 ஈங்கிவள் சென்றது மெய்துந் தோற்றமும்
 ஆங்கவள் வளர்த்தது மறியக் கூறுகேன்
 பாங்குறக் கேளெனப் பட்டி மைக்குவட்
 டோங்கலைத் துளைத்தவ னுரைத்தன் மேயினான்.

(இ - ள்.) இவ்வள்ளி போயதும் அவள் எய்திய பிறப்பும் அக்குழவியை அவ் வேடர்வேந்தன் கண்டெடுத்து வளர்த்ததும் ஆகிய வரலாற்றை நீ நன்குணர்ந்துகொள்ளும்படி கூறுவேன். நன்கு கேட்பாயாக என்று தோற்றுவாய் செய்துகொண்டு வஞ்சமுடைய குவட்டினையுடைய கிரௌஞ்ச மலையைத் துளைத்த அம் முருகவேள் கூறத் தொடங்கினன்.

(வி - ம்.) தோற்றம் - பிறப்பு. பாங்கு - அழகு. பட்டிமை - வஞ்சம்.

(15)

வேறு

 பிள்ளை மதியு மரவும் பிணைசடில
 வள்ளல் கழற்கான் மறவா வழிபாட்டின்
 கள்ளப் புலன்வென்ற கண்ணுவ மாமுனிவன்
 ஒள்ளிய வைகுந்தத் துற்றா னொருவைகல்.