| இருவினர் வழிபட் டேத்தநின் மலனு | | மெதிரெழுந் தருளியஞ் சலிரென் | | றருளியம் முனியை விளித்திவர் சாப | | மனுக்கொரு பவத்தினென் றறுத்தான். |
(இ - ள்.) நீங்குதற்கரிய கொடிய சாபத்தைக் கொடுத்த அக் கண்ணுவ முனிவன் விரைந்து சென்று தன்னிருப்பிடத்தை யடைந்தனன். சாபமெய்திய திருமால் முதலியோர் பெரிதும் அச்சமுற்றுக் கரிய மிடறுடைய பரமசிவனை நூன்முறைப்படி நெஞ்சிலே நிறுத்தி வழிபாடு செய்து வாழ்த்த, நின்மலனாகிய அப்பெருமானும் திருவுளமிரங்கி அவர்முன் எழுந்தருளி அன்புடையீர் ! அஞ்சாதே கொண்மின் என்று தஞ்சமளித்து, அக்கண்ணுவ முனிவனை அழைத்து நீ இவர்க்கிட்ட சாபத்தை ஒரே பிறப்பின்கண் நுகர்ந்தொழிக்கும்படி குறைத்திடுக என்று வரையறுத்தனன். (வி - ம்.) ஒருவரும் - நீங்குதலரிய. மழை - முகில் கருமையுடைய மிடறு என்க. இருவினர் - இருத்தினர். அறுத்தான் - அறுதியிட்டான். (21) | சோத்தமெம் பெருமான் றொழுத்தையேன் வாக்காற் | | சொல்லுதல் வேண்டுங்கொன் முழுதும் | | காத்தரு ளிறைவ வடியவர் மாட்டுக் | | கருணையை விளக்கினை சாபம் | | வீத்தொரு பவத்தி னிவரெலா முன்போன் | | மேகவென் றுரைத்தடி யிறைஞ்சி | | ஏத்தினன் விடைபெற் றேகினன் முனிவ | | னெம்பிரா னருள்செய்து மறைந்தான். |
(இ - ள்.) அக் கண்ணுவமுனிவன் "சோத்தம் ! எம்பெருமானே ! அடியேன் மொழியாலே அதனைக் கூறுதலும் வேண்டுமோ ? அனைத்துயிரையும் பாதுகாத்தருள்கின்ற கடவுளாகிய நீ அடியவர்மாட்டு நினக்குள்ள இயல்பான பெருங்கருணைத் திறத்தை இந்நிகழ்ச்சியாலே எம்மனோர்க்கு விளக்கிவிட்டாய். அடியேன் இட்ட சாபம் இவர்கட்கு ஒரு பிறப்பிலேயே கெட்டு முன்போன்று இவர் தன்னிலை எய்துக என்று சாபவிடை செய்து எம்பெருமான் திருவடிகளை வணங்கி வாழ்த்தினன். எம்பெருமானும் அருள் வழங்கி மறைந்தருளினன். (வி - ம்.) சோத்தம் - இழிந்தோர் வழிபாடு. நீ நினைத்த மாத்திரையே அங்ஙனமே நிகழ்தல் ஒருதலையாகலின் என் வாக்காற் கூறவும் வேண்டுமோ என்றவாறு. வீத்து - கெட்டு. பவம் - பிறப்பு. (22) வேறு | ஊனேறும் வேற்கண்ணா யுறுசாபந் தொடக்குதலும் | | கானேறு மலர்ச்சோலை கமழ்வல்லத் தணிமைக்கண் |
|