| அந்தில்விழிக் கலவிமுனி யாற்றினா னஃதோடி | | நொந்துயிர்த்து வேற்றுருவ நோக்கியகன் றதையன்றே. |
(இ - ள்.) ஆண்மக்கள் பலரை ஈன்று, பெண்மகவில்லாமல் வருத்த முற்றிருந்தனன். இனி, முற்கூறிய திருமகளாகிய பெண்மான் முன்செய்த தவப் பேறுண்மையான் அச்சிவ முனிவன் முன்னர் எய்தா நிற்ப அவ்விடத்தே அம்முனிவன் அப்பிணைமானின் பேரழகில் நெஞ்சம் பறிகொடுத்து அம்மானைத் தன் விழியாலே புணர்ந்தனன். பின்னர் அந்த மான் அவ்விடத்தை விட்டோடிக் கருமுதிர்ந்து வயிறு நொந்து ஒரு பெண்மகவை ஈன்று நோக்கி அம்மகவு வேற்றுருவமாகிய (மானிட) வுருவ முடைத்தாதலை யுணர்ந்து பற்றின்றி அகன்றுபோய்விட்டது. (வி - ம்.) அந்தில் - அவ்விடத்தே. முனி விழிக்கலவியாற்றினான் என்க. வேற்றுருவம் - மானுருவமல்லாத மானிடவுருவம். அகன்றதை - ஐ : சாரியை. (26) | பரிவகலச் சிலைவேடன் படர்ந்தெடுத்து வளர்த்திட்டான் | | அரிமதர்க்க ணிளமுறுவ லந்நலா யறிகென்றான் | | தெரியிழை யாண் மகிழ்சிறந்து சேட்பட்டுக் கிடந்தேமை | | உரிமையுற வுடன்வைத்தா யுத்தமவென் றடிதொழுதாள். |
(இ - ள்.) முற்கூறப்பட்ட வேடர் வேந்தன் அவ்வழியே சென்றவன் அக்குழவியைக் கண்டெடுத்துப் பெண்மகவில்லாத் துன்பம் அகலும்படி வளர்த்தனன் காண் ! செவ்வரி படர்ந்த மதர்த்த கண்களையும் புன்முறுவலையுமுடைய அழகிய தெய்வயானையே. இஃதிவள் வரலாறு என்றருளிச் செய்தனன். அதுகேட்ட தேவயானை மகிழ்ச்சியாலே சிறப்புற்றுப் "பெருமானே நின்னைப் பிரிந்து கிடந்த எளியேங்களை நின் வாழ்க்கைத் துணையாம் உரிமையுறும்படி நின் மருங்கே வைத்தருளினை ! வணக்கம் ! என்று திருவடியிலே வீழ்ந்து வணங்கினள். (வி - ம்.) பரிவு - துயரம். படர்ந்து - சென்று. இளமுறுவல் - புன்முறுவல். சேட்பட்டு - அகன்று. உரிமை உறவுடன் வைத்தாய் எனினுமாம். (27) | இற்றைநாள் பயன்பெற்ற நாளன்றோ வெமக்கென்று | | கற்றைவார் நறுங்கூந்தற் கானவர்தங் குலமகளைப் | | பொற்றொடிக்கை யாலண்மிப் புல்லினாள் பூரித்து | | மற்றவளுய்ந் தேனென்று மறுவலுஞ்சீ றடிபணிந்தாள். |
(இ - ள்.) பின்னர்த் தேவசேனையார் இந்நாள் யாம்செய்த தவப் பயனை யெய்திய பொன்னாளாகும் என்று மகிழ்ந்து கற்றையான நெடிய நறிய கூந்தலையுடைய குறமகளாரை அணுகித் தம்முடைய பொன்வளை யணிந்த கைகளாலே தழுவிக்கொண்டனர். வள்ளிநாயகியாரும் உளம் தழைத்து யான் உய்ந்தேன் என்று கூறி மீண்டுந் தேவசேனையாரின் திருவடிகளை வணங்கினர். (வி - ம்.) பயன் - தவப்பயன். அண்மி - அணுகி. மறுவலும் - மீண்டும். (28) |