பக்கம் எண் :

1364தணிகைப் புராணம்

(இ - ள்.) பொற்கொடியே ! மலைகளுள் வைத்து வெள்ளிமலை பாம்பை மாலையாக வணிந்த பரமசிவனார்க்கு விருப்பமூட்டுவதாய் உரித்தானாற்போன்று விளங்குகின்ற பல மலைகளுள் வைத்து இத்திருத்தணிகைமலை எமக்கு ஆர்வமூட்டுவதாய் உரித்தாயிற்று.

(வி - ம்.) பாப்பலங்கல் - பாம்பாகிய மாலை. பாப்பலங்கலினார்க்கு ஆர்வம் புணர்ப்பதாய் என்னும் எமக்குரித்து என்றும் ஈரிடத்தும் ஏற்றவாறு ஒட்டுக.

(32)

 விரைமல ருள்விரி கஞ்சமும்
 திரைநதி யுட்டிகழ் கங்கையும்
 புரைதப வோங்கிய போன்மென
 வரைகளி னிவ்வரை மாண்பதே,

(இ - ள்.) மணமிக்க மலர்களுள் வைத்துத் தாமரை மலரும் அலையெறியும் யாறுகளுள் வைத்து விளங்காநின்ற கங்கையாறும், உவமையில்லையாக உயர்ந்தனவாதல் போன்று இத் திருத்தணிகைமலை ஏனை மலைகளுள் வைத்து ஒப்பற்ற மாட்சிமையுடையதாகும்.

(வி - ம்.) விரை - மணம். கஞ்சம் - தாமரை. புரை - உவமை, குற்றமுமாம். போன்ம் - போலும்.

(33)

 உருத்தெதிர் தானவ ருள்ளுயிர்
 வருத்துபு மீண்டிவண் வந்துநாம்
 செருத்தணி வெய்தலிற் சீர்ப்பெயர்
 செருத்தணி யென்றுசி றந்ததே.

(இ - ள்.) சினந்து - எம்மை எதிர்த்த அசுரருடைய உள்ளத்தையும் உயிரையும் வருத்தஞ் செய்து மீண்டு இம்மலையின்கண் வந்து யாம் சினந்தணிதலானே இம்மலையின் சிறந்த பெயர், செருத்தணிகை யென்று சிறப்புற்றது.

(வி - ம்.) செருத்தணிகை செருவென்பது குறைந்து தணிகை என நின்றது என்க.

(34)

 அஞ்சன மேனி யவுணர்போர்
 விஞ்சலு றாப்படை விண்ணவர்
 எஞ்சலி லாதெய்து மாண்பினும்
 வஞ்சியன் னாயது வாய்வதே.

(இ - ள்.) பூங்கொடியே ! கறுத்த நிறமுடைய அவுணரைப் போரின்கண் வெல்லமாட்டாத படையினையுடைய தேவர்கள் இதனைப் புகலிடமாகக்கொண்டு குறைவின்றி வந்து தம்மச்சந் தணிதலானும் அப்பெயர் இதற்குப் பொருந்துவதாகும்.

(வி - ம்.) புகலிடமாம் மாண்புடையானும் என்க.

(35)