பக்கம் எண் :

விடையருள் படலம்1365

 எப்பகை யுந்தரு மீண்டிருள்
 துப்புடைத் தொல்செருத் துன்னினார்
 வைப்பிடைத் தாழ்த்தும் வனப்பினும்
 அப்பெய ரிப்பதிக் காயதே.

(இ - ள்.) காம முதலிய எல்லாப் பகையையு முண்டாக்காநின்ற செறிந்த ஆணவமலத்தோடே உண்டான பழைதாகிய வலிய போரினை மேற்கொண்ட முனிவரிடமாகிய அப்பகையையும் தணிக்கின்ற அழகுடைமையானும் அத்திருத்தணிகை என்னும் பெயர் இம்மலைக்குப் பொருந்துவதாயிற்று.

(வி - ம்.) ஈண்டிருன் - செறிந்த ஆணவமலம். துப்பு - வலிமை. தாழ்த்துதல் - தணித்தல்.          

(36)

வேறு

 என்று மிங்குநாம்
 மன்ற வைகுதல்
 நின்று நீலமே
 நன்று ணர்த்துமே.

(இ - ள்.) இத்திருத்தணிகைமலையின்கண் யாம் எப்பொழுதும் வீற்றிருக்குமுண்மையைத் தேற்றமாக ஈண்டுள்ள செங்கழுநீர் அழியா திருத்தலினாலேயே பெரிதும் விளங்கும்.

(வி - ம்.) மன்ற - தேற்றமாக;

(37)

 காலை காய்பகல்
 மாலை மாமலர்
 நீல நேரவிங்
 கால மர்கின்றாம்.

(இ - ள்.) ஈண்டுச் சுனைக்கண் இந்திரனால் நடப்பட்ட செங்கழுநீர், காலையும் நண்பகலும் மாலையுமாகிய மூன்று பொழுதினும் சிறந்த மலரை ஈன்றளிப்ப ஏற்று ஈண்டு யாம் விரும்பியுறையா நின்றோம்.

(வி - ம்.) காய்பகல் : வினைத்தொகை. இங்கால் - ஆல் : அசைச் சொல்.          

(38)

 ஐந்து நாளசைந்
 தெந்த மிணையடி
 வந்து வணங்கினோர்
 பந்தம் பாற்றுவார்.

(இ - ள்.) ஐந்துநாள் இம்மலையின்கண் தங்கியிருந்து எம்பால் வந்து எம்மடிகளை வணங்குவோர் கட்டறுத்து வீடு பெறுவர்.

(வி - ம்.) அசைந்து - தங்கி. பந்தம் - மலப்பற்று. பாற்றுவார் -
அகற்றுவார்.

(39)