வேறு | வீடா வினைமிக் குடைய ரேனும் | | நாடா விவணண் ணினவ ரேமெய் | | வாடா தவர்வா னவரின் மேலாம் | | பீடா யினர்மெய் வளைக்கை நல்லாய். |
(இ - ள்.) அழியாத பெருந்தீவினை யுடையோராயினும், வளையலணிந்த வள்ளி நல்லாளே ! எம்மை நாடி இம்மலையை எய்தியவரே மெய்யுணர்ச்சியில் வாடுதலில்லாதவராகுவர். அவர் வானவரினும் காட்டிற் பெருமைமிக்குடையவர் ஆவர் இஃதுண்மை. (வி - ம்.) வீடா - கெடாத. நாடா - நாடி. மெய் - மெய்யுணர்வு. பீடு - பெருமை. (40) | அறந்தாம் பலவாற் றுநர்க ளேனும் | | சிறந்தா ரெனச்செப் புநர்க ளேனும் | | பிறந்தா ரலர்பெட் டிவணு றாரேல் | | மறந்தாங் கியவாள் பொருது கண்ணாய். |
(இ - ள்.) வீரம் பொருந்திய வாள்போன்ற கண்ணையுடையோய் ! இத்திருத் தணிகைமலையை விரும்பி ஈண்டெய்தாத மானிடர் பற்பல அறங்கள் செய்தனரேனும், மாண்புடையோர் என்று புகழப்பட்டாரேனும் பிறந்த பயனைப் பெற்றிலரே ஆவர். (வி - ம்.) அறம் விருந்தோம்பன் முதலியன. செப்புநர் - செப்பப் படுநர். மறம் - வீரப்பண்பு. (41) | பழிதீர் குறும்பல் லியமி யம்பிக் | | குழலூ தியுங்கோ டுகளி சைத்தும் | | எழுவான் றகர்மஞ் ஞையிவை யூர்ந்தும் | | விழைவால் விளையாட் டயர்து மீண்டே. |
(இ - ள்.) இத்திருத்தணிகைமலையின்கண் விருப்பமுண்மையாலே யாம் குற்றந் தீர்ந்த பலவாகிய இன்னிசைக் கருவிகளை இசைத்தும், வேய்ங்குழலூதியும், கொம்புகளூதியும், எழுச்சியையுடைய சிறந்த ஆட்டுக்கிடாவும் மயிலுமாகிய இவற்றை ஏறிச் செலுத்தியும் திருவிளையாடல் புரியாநின்றேம். (வி - ம்.) தீர்குறும் - தீரும். கோடு - கொம்பு ; ஓரிசைக்கருவி. கருவி. தகர் - ஆட்டுக்கிடா. (42) | என்றே யிவையா தியுற வெல்லாம் | | நன்றே தெரிவித் தருளு நம்பி | | குன்றா வருள்கொண் டனமென் றனபின் | | முன்றாழ்ந்து மொய்பூங் குழன்ம கிழ்ந்தாள். |
|