பக்கம் எண் :

1370தணிகைப் புராணம்

 நோற்றலின்மி குத்தவற வோயிவையெ மக்கெளிய
           வல்லநுத னோக்கின் மதவேள்
 ஆற்றலுட லம்பொடிப டுத்தவிறை யேயறியு
           மாங்கவனு தற்க ணருளும்
 வேற்றலைவ னேயறியு மன்றியறி வாரிலை
           விசாகனைய டுப்பி னவனே
 தேற்றுவன தற்குரிய தேயமுய ருந்தணிகை
           சேறியென வோதி னனயன்.

(இ - ள்.) பிரமதேவன் தவச்செயலிலே உயர்ந்த நாரதனே ! கேள். நீ வினவிய இவை எம்மால் விடை தருதற்கியன்ற எளிமையுடைய வினாக்களல்ல, இவற்றிற்கு விடை தருதற்கு நெற்றி விழியாலே காமவேளின் ஆற்றலுடைய உடம்பினை நீறாக்கிய சிவபெருமானே யறிகுவன், இன்றேல் அவன் நெற்றிக்கண்ணீன்ற வேற்படை யேந்திய முருகனே யறிகுவன், இவ்விருவரையுமன்றி அறிவார் பிறர் யாருமிலர் கண்டாய். ஆதலின், அம்முருகப் பெருமானை அடுத்தால் அவனே நின் ஐயங்களைப் போக்கித் தெளிவிப்பன். அப்பெருமானுக்குரிய நாட்டின்கண் உயர்ந்த திருத்தணிகை மலைக்குச் செல்வாயாக என்று கூறினன்.

(வி - ம்.) நோற்றல் - தவஞ் செய்தல். இறை - பரமசிவன். வேற்றலைவன் - முருகன். சேறி - செல்லுதி. அயன் - பிரமன்.

(5)

 கந்தவரை யாதிபல வுங்கடவு ளார்சிறை
           கடிந்தமுரு கன்வ திவுற
 எந்தைதணி கைக்கிரியு ரித்தெனமி குத்துரை
           யியைத்திதணி கைப்பெ ருமையைச்
 சிந்தையின்ம யக்கறவு ணர்த்துதியெ னப்பணிதல்
           செய்தன னெழுந்து முனிவன்
 தந்தைகும ரன்கழனி னைந்துதணி கைப்பெருமை
           சாற்றுதல் வலித்த னனரோ.

(இ - ள்.) அதுகேட்ட நாரத முனிவன் தந்தையாகிய பிரமதேவனை அடிவீழ்ந்து வணங்கி எழுந்து நின்று, எந்தையே ! கந்தமாதன மலை முதலிய பல்வேறு மலைகளினும் தேவர்களைச் சிறைவீடு செய்த முருகப்பெருமான் எழுந்தருளியிருப்பவும், நீ அவனுக்குரிய திருத்தணிகை என்று மிகைபடத் திருத்தணிகையைப் புகழ்ந்தனை. அங்ஙனம் புகழ்தற்குரிய திருத்தணிகையின் சிறப்பினை என் மன மயக்கந் தீரும்படி உணர்த்தியருள்க என்று வேண்டாநிற்பப் பிரமதேவன் முருகப்பெருமான் திருவடிகளை நெஞ்சிலே நினைந்து வழிபாடு செய்து திருத்தணிகைமலைச் சிறப்பினைக் கூறத் துணிந்தனன்.

(வி - ம்.) கடவுள் - அமரர். ஆர்சிறை : வினைத்தொகை. எந்தை - விளி.          

(6)