(இ - ள்.) மேன்மைதக்கிருப்ப விளங்கா நின்ற அத்திருத்தணிகையினது சிறப்புகள் இன்னோரன்ன எண்ணிறந்தனவுளவாகும். ஆதலின் உயிர்கட்கு அருள் வழங்குதல் முதலிய அனைத்தையும் அம்முருகப் பெருமானே உடையன் ஆவன் ; அவன் திருவருள் வழங்குதற்கேற்ற மாண்புடைய இடமும் ஈண்டுக் கூறப்பட்ட அத்திருத்தணிகை மலையே ஆகும். என்று நன்கு உணர்ந்து கொள்வாயாக என்று அன்னக்கொடி யுயர்த்த தாமரை மலரணைமேல் வீற்றிருக்கும் பிரமதேவன் கூறியவளவிலே நாரத முனிவன் மகிழ்ந்து அவன் அடிகளை வணங்கி விடை கொண்டனன். (வி - ம்.) மான்மியம் - சிறப்பு. தெரித்தி : விகாரம் ; தெரிதி என்க. வனசம் - தாமரை. வீணைமுனிவன் - நாரதன். (14) வேறு | விண்ணெறி நீந்திவி ளங்கிய நாரத மெய்ம்முனி வாரிதிசூழ் | | மண்ணிடை வந்துவ ளந்தணி கைப்பதி வைப்பின்வயங்கிலைவேல் | | அண்ணன்ம லைக்குவ டாதுகு டக்கி னலைத்தகி லுந்திவரும் | | தண்ணிய நந்திந திக்குவ டாது தயங்கிய வெற்பணவி. |
(இ - ள்.) விளங்கிய மெய்மையுடைய அந்நாரத முனிவன் பிரம லோகத்தினின்றுமிழிந்து வான்வழியைக் கடந்து கடல்சூழ்ந்த மண்ணுலகத்தை எய்தி வளமுடைய திருத்தணிகை நகரத்துள்ள விளங்கா நின்ற வேற்படையினையுடைய முருகப்பெருமானுடைய மலைக்கு வட மேற்றிசையின்கண் அலையெறிந்து அகில்மரத்தை யுருட்டி வருகின்ற குளிர்ந்த நந்தியாற்றின் வடக்கே விளங்கிய மலையையடைந்து. (வி - ம்.) விண்ணெறி : பண்புத்தொகை. இழிந்து - இறங்கி. (15) | வானதி சென்னிமி லைத்தபி ரானடி வந்தனை செய்யவிது | | தானமெ னக்கரு தித்தவழ் நந்தித டம்புன லாறுபடிந் | | தீனம லத்தையி ரிக்கும்வி பூதியி லங்கிய கண்மணியும் | | மேனிய ணிந்துப திட்டைபு ரிந்துவி திப்படி பூசைசெய்தான். |
(இ - ள்.) இவ்விடம் வானகங்கையைச் சடையிலே அணிந்த சிவ பெருமானை வழிபடுதற்கேற்றதாகும் என்று கருதி அயலிலே ஒழுகா நின்ற நந்திப் பேரியாற்றிலே நீராடி குற்றமுடைய ஆணவமலத்தைக் கெடுக்குமியல்புடைய திருவெண்ணீறும், விளங்கிய கண்மணி மாலையும் உடலிலே அணிந்துகொண்டு அருட்குறி நிறுத்திச் சிவாகம விதிப்படி வழிபாடியற்றினான். (வி - ம்.) வானதி - ஆகாய கங்கை. தானம் - இடம். ஈனமலம் - குற்றமுடைய ஆணவமலம். கண்மணி - அக்கமணி. பதிட்டை - பிரதிட்டை. (16) | பட்டினி விட்டொரு திங்கணி றைந்தப ராபரன் வந்தனையின் | | கட்டிய செஞ்சடை நாரத மாமுனி காதலின் வைகுதலும் |
|