பக்கம் எண் :

விடையருள் படலம்1377

 நித்தன ருட்கிட னாகிய மாமுனி நீடும கிழ்ச்சியனாய்ப்
 பைத்தந திப்புன லாடியு யர்ந்தப ருப்பத மெஃகல்செய்வான்.

(இ - ள்.) அத்தகுதியுடைய நாரதலிங்கத்தை வணங்குவோரும் வாழ்த்துவோரும் தாம்தாம் விரும்பிய நுகர்ச்சியனைத்தையும் நிரப்பிய செல்வத்தையுடையவராய் இருவினைகளையும் துவரக்கெடுத்துப் பரமுத்தியினை எய்தாநிற்பர். இனி, இறைவன் திருவருட்கு ஆளாகிய சிறப்புடைய அந்நாரத முனிவன் நீளாநின்ற மகிழ்ச்சியை யுடையனாய் நந்தியாற்றின் பசிய நீரிலேயாடி உயரிய திருத்தணிகை மலையின்மேல் ஏறுபவன்.

(வி - ம்.) ஆர்வம் : ஆகுபெயர். மெத்திய - நிரம்பிய. விளித்து - கெடுத்து. உயர்வீடு - சாயுச்சிய பதவி. நித்தன் - சிவன். எஃகல் - ஏறுதல்.

(20)

 குணாதுதி சைக்கண ணைந்துப ணிந்துகு ழைந்தவு ளத்தினொடும்
 பிணாவய வுக்கரி யேறிரை நாடுபி றங்கல்வ லம்புரியூ
 அணாவுநெ டுங்கொடி மேகமொ டாட்டய ராலய முற்றடிதாழ்ந்
 துணாவிர விற்றுயி லின்றிவி சாகனை யுன்னியி ருந்தனனே.

(இ - ள்.) அம்மலையின் கீழைத்திசையில் சென்று அம்மலையினைப் பணிந்து அன்பால் நெகிழ்ந்த உள்ளத்தோடு சூல்கொண்ட யானையைத் தனக்கு இரையாக அரிமான் ஆராய்நின்ற அம்மலையினை வலம்வந்து உயர்ந்த நெடிய கொடிகள் முகிலோடு விளையாட்டயர்தற்குக் காரணமான திருக்கோயிலை அணுகி வணங்கி உணவும் இரவிற்றுயிலும் இல்லாமல் இருந்து முருகப்பெருமானைத் தேனித்தனன்.

(வி - ம்.) குணாதுதிசை - கிழக்கு. பிணா - பெண். ஏறு - ஆண் சிங்கம். பிறங்கல் - மலை. அணாவும் - அணவும்.

(21)

வேறு

 அற்றையிராப் புலர்காலை யைதுவெண் ணீறுதரித்துப்
 பற்றியயோ கமுழந்து பணிந்துபிரா னைப்புறம்போந்
 துற்றவிதிப் படிகோறின் றுமிழ்ந்துநறும் புனறோய்ந்து
 முற்றுறநாட் கடனாற்றி முதல்வனையண் மிப்பணிந்தான்.

(இ - ள்.) அற்றைநாள் இரவு புலராநின்ற வைகறைப் பொழுதிலே அழகிதாகத் திருவெண்ணீறு தரித்துக்கொண்டு இறைவனை நெஞ்சாலே பற்றிய யோகத்தைச் செய்து கடவுளைப் பணிந்து புறத்தே சென்று நூலில் கூறிய முறைப்படி கோல்தின் றுமிழ்ந்து நறிய புனலிலே படிந்து நாட்கடன் முடித்து முருகப்பெருமான் திருமுன் சென்று பணிந்தனன்.

(வி - ம்.) ஐது - அழகிய ; நுண்ணிய நீறுமாம். கோறின்றுமிழ்ந்து என்றது, பல் வாய் முகம் முதலியன தூய்மைசெய்தென்றவாறு.

(22)