பக்கம் எண் :

1380தணிகைப் புராணம்

 அரியய னமரரு மடிதொழு மமரனை
 எரிசடை யிறைபணி யிறைமையி னிலவினை
 எரிசடை யிறைபணி யிறைமையை யாதலின்
 உரைபெற வெளியமு முனகழல் பரவுதும்.

(இ - ள்.) பெருமானே ! நீதான் திருமாலும் பிரமனும் தேவேந்திரன் முதலிய தேவர்களும் அடிவீழ்ந்து வணங்குகின்ற தேவதேவனாகின்றாய். மேலும் விளங்காநின்ற சடையையுடைய சிவபெருமானும் பணிதற்குரிய தலைமைத் தன்மையுமுடையையாயிருந்தனை ; சிவபெருமானும் பணிதற்குரிய தலைமையுடையையாதலின், எளியேமும் நின்னடியம் என்னும் புகழைப் பெறுதற்பொருட்டு நின் திருவடிகளை வணங்காநின்றேம்.

(வி - ம்.) எரிசடை : வினைத்தொகை ; உவமத்தொகையுமாம். உரை - புகழ்.

(29)

வேறு

 என்று தோத்திர மியம்பிய பெருந்த வனெழுந்
 தொன்று செங்கைமுடி வைகவுரை தள்ள வுடலில்
 துன்று மென்மயிர்பொ டிப்பவிழி நீர்து தையநேர்
 நின்ற னன்வரநி கழ்த்தென நிகழ்த்த லுறுவான்.

(இ - ள்.) இவ்வாறு வாழ்த்துக்கூறிய நாரத முனிவன் எழுந்து தன் சிவந்த கைகள் குவிந்து உச்சியிலே பொருந்தவும், மொழி தடுமாறவும், உடம்பிற் செறிந்த மெல்லிய மயிர்கள் சிலிர்ப்பவும், கண்களில் நீர் தேங்கவும், எம்பெருமான் முன் அவசனாய் நின்றனனாக, அந்நிலைகண்ட எம்பெருமான் "முனிவனே நின் அன்பாலே யாம் மகிழ்ந்தோம் ! நீ வேண்டும் வரங்களை விளம்புக என்றருளிச்செய்ய முனிவன் கூறலானான்.

(வி - ம்.) பெருந்தவன் - நாரதன். தள்ள - தடுமாற.

(30)

 கடுத்த யான்றெளிய வோதலெதிர் காட்சி யிறைநீ
 கொடுத்த வைகலிது கன்னிமதி கூர்த லையுவா
 அடுத்த வத்தமிதி லாடியிதி னிற்ப ணிகுவோர்
 விடுத்து வல்வினைவி ழைந்தபெற நல்க வெனலும்.

(இ - ள்.) எம்பெருமானே ! யான் ஐயுற்ற பொருள்களைத் தெளிவுறும்படி செவியறிவுறுத்தலும், எளியேன் முன்னர் கடவுளாகிய நீ எளி வந்து காட்சியளித்த நாளாகிய இது, புரட்டாசித் திங்களிலே பூரணையைப் பொருந்திய அத்தநாள் ஆதலின் இந்த நாளிலே இத் தீர்த்தத்திலே ஆடி நின்னைத் தொழும் அடியவர் தமது தீவினையை அகற்றித் தாந் தாம் விரும்பிய நுகர்ச்சிகளைப் பெறும்படி திருவருள் புரிதலும் யான் வேண்டும் வரங்களாம் என்று வேண்டுமளவிலே,