பக்கம் எண் :

விடையருள் படலம்1385

 மாயனை யயனை யெரித்துநீ றங்கம்
           வண்டலை யணிந்திடு மொருகால்
 தூயவன் னவரைச் சூலவாய் மடுத்துத்
           தோளணி யாக்கிடு மொருகால்
 ஆயவப் பொழுதின் முடிச்சிகை வாங்கி
           யகலத்து நூலென வயக்கும்
 நாயகன் செயற்கை தெரிக்குநர் யாரே
           நன்றவர் புரிதவப் பேற்றான்.

(இ - ள்.) இவ்வாறு தூயவனாகிய எம்பெருமான் திருமால் பிரமன் முதலியோரை நீறாக்கி அந்நீற்றினையும் அவர் உறுப்புகளையும் அணியாநிற்பன். இனி அப்பெருமான் மற்றோரூழியில் அத்தேவர்களைத் தனது சூலத்தாற் குத்திக் கோத்துத் தனது தோளின்கண் மாலையாக அணிந்து கோடலுஞ்செய்வன். அங்ஙனம் சூலத்தாற் கோக்குங்கால் அத் தேவருடைய தலைமுடியை வாங்கிக் கயிறாகத் திரித்து தன் திருமார்பிலே பூணூலாகவும் அணிந்துகொள்வன். எம்பெருமானுடைய செயலை யாரே தெரிந்து கூறவல்லவர் ? இனி அத் தேவர்களியற்றிய தவப்பயன் உண்மையான் அவருடலங்கள் எம்பெருமானுக் கணியாயின என்றறிதி.

(வி - ம்.) தூயவன் - சிவபெருமான். சிகை - குடுமி.

(42)

 மறைகவ ரவுணற் செகுத்துமீட் டுலக
           மறுகுற வுடற்றிய மீனை
 முறைபுரிந் திடந்த விழியினை மீட்டு
           மூரிமா றருக்குறா வண்ணம்
 இறையவ னணிந்தா னெஞ்சுபூ வொன்றற்
           கெதிர்மலர்ப் பங்கய விழியொன்
 றறைகழற் பதத்து மற்றொரு காலத்
           தணிந்தன னாழிவேட் டரியே.

(இ - ள்.) பண்டொரு காலத்தே வேதங்களைக் கவர்ந்து கொண்டு கடலிலேபுக்கொளித்த அசுரன் ஒருவனைத் திருமால் மீனாகிக் கொன் றொழித்து இப்பேருலகம் வருந்தும்படி அலைத்தானாக, அம்மீனை எம் பெருமான் கொன்றருளி மீண்டுந் திருமால் அங்ஙனம் செருக்கி உலகிற்கிடர் சூழாமற் பொருட்டு அம்மீனின் விழிகளையிடந்து தன் மேனியிலே அணிந்துகொண்டனன். இனி மற்றொரு காலத்தே அத்திருமால் சக்கரப்படை பெறுதற்பொருட்டு நாடோறும் ஆயிரம் மலரிட்டு எம்பெருமான் அடி வழிபாடு செய்பவன் ஒருநாள் ஒரு மலர் குறைந்தமையால் அதற்கீடாகத் தனது ஒன்றையொன்றெதிர்ந்த தாமரை போன்ற கண்களிலே ஒன்றை அகழ்ந்து எம்பெருமானுடைய திருவடியிலே சாத்தினன் காண். இதனையும் அறிவாயாக.