பக்கம் எண் :

1386தணிகைப் புராணம்

(வி - ம்.) மீன் - திருமாலாகியமீன். மூரி - பெருமை. எஞ்சுபூ குறைந்த பூ. அறைகழல் - வினைத்தொகை. ஆழி - சக்கரம்.

(43)

 தாய்க்கலாம் விளைத்த மாற்றவ ளுயிர்த்த
           தனயரென் றிகல்கொடு கருடன்
 ஊக்கமிக் கலைப்ப வுளைத்தராத் தொகுதி
           யுற்றடிப் பூசனை யுஞற்ற
 நீக்கமி லணிக ளாக்கின னிமல
           னீடுதா ருகவனத் தவர்வேட்
 டாக்கிமே லுகைத்த வாளரா வினமு
           மணியெனத் தாங்கின னறவோய்.

(இ - ள்.) அறவோனே ! ஒரு காலத்தே கருடன் தனது தாய்க்குக் கொடுமை புரிந்து கலகஞ்செய்த மாற்றாந்தாய் ஈன்ற மக்கள் என்ற காரணத்தால் பகைமை கொண்டு ஊக்கமிகுந்து வருத்துதலானே பாம்புத்திரள் வருந்தி எம்பெருமான்பால் எய்தி திருவடிகளை வணங்கி வழிபாடாற்ற அவற்றின்பா லிரக்கம் கொண்ட இறைவன் அவற்றினைத் தன் மெய்யினின்றும் பிரிதலில்லாத அணிகலன்களாக அணிந்து கொண்டனன். இனி எம்பெருமானுக்குத் தீங்கு செய்யக் கருதிய நெடிய தாருகாவனத்து இருடியர் வேள்வி செய்து படைத்து விடுத்த வாள்போலுங் கொடிய பாம்புகளையும் அணிகளாக்கிக் கொண்டனன் காண்.

(வி - ம்.) தாயோடு கலாம் விளைத்த என்க. இகல் - பகைமை.

(44)

 தொக்கபே ராற்றன் மிகும்விராட் புருடன்
           றொல்லுடன் மயிர்தொறுந் தூங்கும்
 தக்கபே ரண்ட மனைத்துந்தன் னகட்டுட்
           சார்த்துவான் சார்ந்தனன் றொடங்கும்
 கொக்கின்மா ணுருவிற் றானவற் செகுத்துக்
           கோலவெள் ளிறகினை யவன்போல்
 மிக்கபே ராற்ற லுடையவர் தருக்கா
           வினைகொள முடித்தனன் விமலன்.

(இ - ள்.) தொகுதிப்பட்ட பேராற்றலுடைய விராட் புருடனுடைய பழைதாகிய உடம்பின்கண்ணுள்ள மயிர்தொறுந் தொங்கா நின்ற தகுதியுடைய பேரண்டங்கள் அனைத்தையும் விழுங்கித் தனது வயிற்றிலே அடக்குதற்கு முயன்ற கொக்கினது மாட்சிமைப்பட்ட உருவமுடைய அசுரனைக் கொன்று அக் கொக்கினது அழகிய இறகினை அவ்வசுரனைப் போன்று மிகுந்த பேராற்றலுடைய ஏனைய சுரர்கள் செருக்குற்றுத் தீமை புரியாமைப் பொருட்டு எம்பெருமான் சடையிற் சூடியருளினன்.

(வி - ம்.) விராட்புருடன் - பரப்பிரமம். அகடு - வயிறு.

(45)