பக்கம் எண் :

1388தணிகைப் புராணம்

 மடங்கலந் துளவன் மலியுயிர் குமைப்ப
           வண்சிறைச் சிம்புளாய்த் தாக்கி
 அடங்கவுட் செருக்குச் சிரத்தினைச் சிரமே
           லயன்சிர மீச்சுமாய்ப் பரித்துத்
 தடங்கிளர் தோளி னுத்தரா சங்க
           மாக்கினன் றயங்கிய வுரியை.

(இ - ள்.) ஒருசேர உலகமனைத்தையும் வென்று தன்னடியின்கீழ்ப் படுத்து வெற்றியாலோங்கிய இரணியனுடைய உயிரைப் பருகிய நரசிங்க மாகிய திருமால் பின்னர்ச் செருக்குற்று மிகுந்த உயிரினங்களைக் கொல்லா நிற்புழிச் சிவபெருமான் வலிய சிறகினையுடைய சிம்புளாகி அச்சிங்கத்தைத் தாக்கிப் பெரிதும் அகத்தே செருக்குடைய அந்நரசிங்கத்தின் தலையைத் தன் தலைமேலணிந்த பிரமன்றலைமேலே சுமத்தித் தாங்கி, அச்சிங்கத்தின் தோலைப் பெரிய தனது ஒளியுடைய தோளின் மேல் மேலாடையாய் வீக்கியருளினன்.

(வி - ம்.) மடங்கல் - நரசிங்கம். சுமாய் - சுமத்தி. உத்தராசங்கம் - மேலாடை.

(48)

 காதியெவ் வுலகுங் கடவுளர் முதலோர்
           கரந்துறை காசிமா நகரும்
 மோதவங் கடுத்த கயாசுர னெதிரே
           மொய்த்தபே ரொளியுருத் தாங்கி
 மேதக நின்று கிழித்தெடுத் தமர்த்த
           வியனுரு நோக்க லாற்றாது
 மாதவர் முதலோர் வருந்தவவ் வொளியை
           மறைத்தனன் படாமெனப் போர்த்து.

(இ - ள்.) இனி ஒருகாலத்தே கயமுகாசூரன் எல்லாவுலகங்களையும் அழித்துக் காசிமா நகரத்திலே மறைந்துறைந்த தேவர்களையும் தாக்குதற்கு அங்கே வந்தபொழுது அவ்வசுரர் முன்னர் எம்பெருமான் செறிந்த பேரொளிப் பிழம்பாகியதொரு வடிவங்கொண்டு மேன்மை திகழ நின்று அவ்வசுரனுடைய பெரிய உருவத்தைக் கிழித்துத் தூக்கிப் போர் செய்த அத்திருவுருவத்தை நோக்க வியலாமல் முனிவர் முதலியோர் வருந்தா நிற்ப, அவ்வருத்தந் தீர்தற்பொருட்டு எம்பெருமான் கிழித்த அக்கயமுகாசூரன் உடலைப் போர்வையாகப் போர்த்து அப் பேரொளியை மறைத்தருளினன்.

(வி - ம்.) காதி - அழித்து. கடவுளர் - தேவர். அமர்த்த - பொருத, படாம் - போர்வை.

(49)

 உயிர்க்குயி ராய்நின் றுறுவினைப் பயன்க
           ளூட்டுநம் மிறைவனை யின்றி