பக்கம் எண் :

1390தணிகைப் புராணம்

 கொடுமகத் தழலி னிடிக்குரற் பேழ்வாய்க்
           குயவரி வேங்கையொன் றெழத்தாழ்ந்
 தடுதியென் றுகைத்தா ரயிலுகிர்க் கீறி
           யரைக்குடை யாக்கினன் பின்னர்
 விடுசுடர் மழுமான் வியாளம்பா ரிடம்வெண்
           டலைவர விடுத்துமந் திரத்தைக்
 கடவிவேட் டெழுந்த முயலகன் மகவெங்
           கனலையு முடங்குற விடுத்தார்.

(இ - ள்.) கொடிய அவ்வாபிசார வேள்வித் தீயினின்றும் இடி போன்ற குரலையும் பெரிய வாயினையும் கூன்குயம் போன்ற கோடுகளையும் உடைய வேங்கையொன்று தோன்றா நிற்ப, அதுகண்ட அம் முனிவர் அவ்வேங்கையை வணங்கி, நீ போய் அச்சடையனைக் கொல்லுக என்று கூறி விடுத்தனன். எம்பெருமான் தன்பாலுற்ற அவ்வேங்கையைத் தனது கூரிய நகத்தாலே பிளந்து அதன் தோலைத் திருவரைக்கு ஆடையாக அணிந்தருளினன். மீண்டும் அம்முனிவர் ஒளிவிடும் மழுவையும் மானையும் பாம்பினையும் பூதத்தினையும் வெள்ளிய தலையினையும் வேள்வியினின்றும் வரவழைத்து எம்பெருமான் மேலேவிப் பின்னரும் மந்திரமோதி வேள்வி செய்தமையானே தோன்றிய முயலகன் என்னும் பூதத்தையும் அவ்வேள்வித் தீயினையும் ஒரு சேரச் செலுத்தினர்.

(வி - ம்.) கொடுமகம் - ஆபிசார வேள்வி. பேழ் - பெரிய, குயம் - அரிவாள்.

(52)

 மழுப்படை யாக்கி மறிதுடி யெனச்சென்
           மந்திரஞ் செவிகளிற் றழங்கத்
 தழிக்கரத் துயர்த்துத் தலைதலை யணிந்து
           தழலொரு கரத்துறீஇப் பூதர்
 குழுப்புடை பெயரா விழுப்படை யாக்கிக்
           கொழுவலி முயலகன் வெரிந்தாள்
 அழுத்திநின் றாடி யயருல குய்ய
           வடுத்துமை காணநோக் களித்தான்.

(இ - ள்.) மழுவினைப் படைக்கலனாக்கிக்கொண்டு மானும் துடியுமாக வந்த மந்திரங்கள் தன் திருச்செவியில் ஒலிக்கும்படி கைகளாற் றழுவி ஏந்திக்கொண்டு தலையைத் தலைமிசை யணிந்துகொண்டு நெருப்பினை ஒரு கையிலேந்திக் கொண்டு பூதத்திரளைத் தன் பக்கத்தினின்றும் எஞ்ஞான்றும் அகலாத சிறந்த படைஞராக அமைத்துக் கொண்டு கொழுவிய வலிமையுடைய முயலகனுடைய முதுகின்மிசைத் திருவடியை ஊன்றி நின்று வருந்தா நின்ற உலகமனைத்தும் உய்யவும், உமையம்மையார் அடுத்து நின்று காணவும் திருக்கூத்தாடிக் காட்சி நல்கினன்.