பக்கம் எண் :

விடையருள் படலம்1391

(வி - ம்.) மறி - மான். துடி - உடுக்கை. தழி - தழுவி. வெரிந் - முதுகு.

(53)

 விடைபொடி விழியென் பழிதலை யராவெள்
           ளிறகுமா லோடுகோ டதடீப்
 படைமழு மறிவெம் பாரிட மியைந்த
           பரிசுமை யம்புகு பரிசும்
 உடையவ னடன முமையவள் காணு
           முண்மையு முரைத்தன முமைகாண்
 நடைபிணி மகவுக் கறமருந் தன்னை
           நாடியுண் டாற்றுதல் போலாம்.

(இ - ள்.) நாரதனே ! எம்பெருமான் ஆனேற்றினையும் திருவெண்ணீற்றினையும் விழியையும் என்பையும் அழிந்த தலையோட்டினையும், பாம்பினையும், கொக்கிறகினையும், யாமையோட்டினையும் பன்றிக்கொம்பினையும், புலித்தோலையும், தீயினையும் மழுவினையும் மானையும் வெவ்விய பூதங்களையும் உடையனாகிய செய்தியினையும், அவன் ஐயமேற்ற செயலும், அவனுடைய திருக்கூத்தினை உமையம்மை விரும்பிக் காணும் பெற்றியும் கூறினாம். உமையம்மையார் எம்பெருமான் கூத்தினைக் காண்டல் மகவுக்கு நிகழும் பிணி தீர்தற்கு அன்னை மருந்தினை ஆராய்ந்துண்ணல் செய்தல்போல் என்றுணர்க.

(வி - ம்.) பரிசு - தன்மை. மகவுக்குப் பிணியற என்க.

(54)

 வயிரவ னெனுந்தங் கூற்றினு மையம்
           வையகத் தேற்றன னதுவும்
 பயிலுமற் றனவுந் தெரிக்குதுந் தெரிதி
           பழவினைப் பற்றறு தவத்தோய்
 அயனரி மேரு வரையிடை யொருஞான்
           றமர்ந்துடங் கிருந்தனர் தேவர்
 நயனுறு முனிவர் நண்ணின ரேக
           நாயகன் யார்நவில் கென்றார்.

(இ - ள்.) இன்னும் எம்பெருமான் வயிரவன் என்னுந் தனதொரு வடிவத்தானும் உலகத்தே பிச்சை யேற்றனன், அச்செயலையும் அவன் மேற்கொண்ட பிறசெயலையும் உணர்த்துவேம் உணர்க. பழைய வினைகளின் தொடக்கறுத்த தவத்தையுடைய நாரத முனிவனே ! பண்டொரு காலத்தே மேருமலைச் சாரலிலே பிரமதேவனும் திருமாலும் ஓரிடத்தே கூடியிருந்தனராக ; ஆண்டு வந்துற்ற தேவர்களும் நயமுடைய முனிவரும் அவ்விருவரையும் நோக்கித் தனி முதற் கடவுள் யார் என்று வினவினர்.

(வி - ம்.) ஐயம் - பிச்சை. உடங்கு - ஒருசேர.

(55)