| | மம்மரின் முழுகு மலரவன் யானே | | | யென்றனன் மாயவன் யானே | | | செம்மலெண் குணத்துப் பிரமமென் றுரைத்தான் | | | செருக்கினா லின்னணங் கலாய்ப்ப | | | மும்மறை குடிலை வேறுவே றணுகி | | | முக்கணெம் பிரான்பரப் பிரமம் | | | அம்மவென் றுரைத்துந் தெளிகில ராக | | | வமலனா ரெதிருற வடுத்தார். |
(இ - ள்.) மயக்கத்திலே முழுகியிருந்த பிரமதேவன் யானே முழு முதற்கடவுள் என்றனன். திருமாலும் மயங்கி யானே தலைமை பொருந்திய எண்வகைக் குணத்தையுடைய தனிப்பெருங்கடவுள் என்று கூறினான். இவ்வாறு இவ்விருவரும் மலவீக்கத்தாற் செருக்குற்றுத் தம்முட் கலகம் விளையா நிற்ப, இவர்கள் பால் குடிலை மும்முறை தனித்தனி சென்று மூன்று திருக்கண்களையுடைய எம்பெருமானே தனிப் பெருங்கடவுள் என்று தெளிவித்தும் தெளியாதவராக ; அவர் முன்பு அநாதி முத்தனாகிய சிவபெருமான் எழுந்தருளினர். (வி - ம்.) மம்மர் - மயக்கம். செம்மல் - தலைமைத் தன்மை. எண்குணம் - தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கை யுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்கல், பொருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை என்பன. அம்ம, கேட்பித்தற் கண் வந்தது. அமலனார் - சிவபெருமான். (56) | | நாரணன் றெருண்டு வணங்கியோட் டந்தா | | | னான்முக னுச்சியின் முகத்தாற் | | | பூரணர் தம்மை யிகழ்ந்தனன் ஞாளிப் | | | புனிதனைத் தோற்றிமான் றிகழும் | | | ஆரணன் முதலோர் தருக்கெலாங் களையென் | | | றருளிவிண் மறைதலும் வடுகன் | | | கூரணி யுகிராற் கொவ்வையங் கனிபோற் | | | கொய்தன னுச்சிவான் றலையை. |
(இ - ள்.) எம்பெருமான் எழுந்தருளிய துணையானே திருமால் மயக்கந் தெளிந்து எம்பெருமானை வணங்கி ஓடினன். நான்முகன் தெளிவிலனாய்த் தனது உச்சி முகத்தாலே முழு முதல்வனாகிய இறைவனை இகழ்ந்தனன். எம்பெருமான் நாயூர்தியையுடைய வயிரவக் கடவுளைத் தோற்றுவித்து மயங்கி இகழா நின்ற பிரமன் முதலியோர் செருக்கெலாம் அகற்றுக என்று பணித்து விண்ணில் மறைந்தருளினன். அவ்வளவில் வயிரவன் கூர்த்த தனது அழகிய நகத்தானே கோவைக் கனியைக் கிள்ளுமாறு பிரமனுடைய உச்சித் தலையைக் கொய்தொழித்தனன். |