பக்கம் எண் :

1394தணிகைப் புராணம்

 சுடுவனத் தாடி யெனப்பரம் பொருளைச்
           சொற்றதச் சுடுவனங் காண்டி
 வடுகனங் கிருந்தோன் மாவலி கொடுப்ப
           மண்ணளந் துலகெலா மலைத்த
 நெடுகிய மாலைத் தருக்கறத் தாக்கி
           நீள்வெரி நெலும்புகைக் கொண்டு
 படுமுட லுரிவை கஞ்சுக மாக்கிப்
           பல்லுயி ரோம்பினன் முனியே.

(இ - ள்.) நாரத முனியே ! சுடுகாட்டின்கண் ஆடுபவன் என்று இறைவனைச் சொல்லுங்கால் சுடுகாடென்றது அந்தச் சுடுகாட்டினையே என்றுணர்வாயாக. அண்டமுகட்டிலே இருந்த வயிரவன், மகாபலி வழங்கத் திருமால் மண்ணெலாம் பேருருக் கொண்டு அளந்துழி உயிரை யெல்லாம் வருத்த அந்நெடுமாலுடைய செருக்ககலும்படி தாக்கி அவனுடைய நெடிய முதுகெலும்பினைக் கையிலே கொண்டு இறந்து வீழ்ந்த அவனுடலையுரித்த தோலை மெய்ப்பையாக்கிக் கொண்டு பலவாகிய உயிரையும் பாதுகாத்தருளினன் காண்.

(வி - ம்.) சுடுவனம் - சுடுகாடு. வெரிந் - முதுகு. கஞ்சுகம் - சட்டை.

(60)

வேறு

 உமையாள்விழி மூடவி ருட்படலத்
           துலகங்கவ லக்கனல் வாள்விழியால்
 அமையாவரு ணாதனி ரித்தொளிமிக்
           கருளக்கிளர் வேர்விர றோறுமெழ
 இமையாவிழி மாதுவி திர்ப்பவவை
           யெங்கும்பெரு வெள்ளமெ னப்பெருகக்
 குமையாதரு ளென்றெவ ரும்பரவக்
           கூவிச்சடி லங்குடி யேற்றினனே.

(இ - ள்.) இனி, உமையம்மையார் சிவபெருமானுடைய திருக்கண்களைப் புதைத்துழி உலகமெல்லாம் பேரிருளிற் கிடந்து வருந்த ஒழியாத பேரருட் பெருமான் தனது நெற்றியிலே தோற்றுவித்துக் கொண்ட தீவிழியாலே அவ்விருளைக் கெடுத்து அனைத்துலகிற்கும் மிகுந்த வொளியை வழங்கினனாக, அப்பொழுது இறைவி தனதுவிரல் தோறு மெழுந்த வியர்வை நீரைத் தெறித்தருள அந்நீர் உலகெங்கும் பெரிய வெள்ளமாகப் பெருகிற்றாக, தேவர் முதலியோர் இவ்வெள்ளம் எம்மை அழித்தொழியாமல் திருவருள் புரிக என்று வேண்டா நிற்ப எம்பெருமான் அந்நீர்ப்பெருக்கினை ஒரு சேர அழைத்துத் தனது திருமுடியின்கண்
குடிவைத்தருளினன்.