பக்கம் எண் :

விடையருள் படலம்1395

(வி - ம்.) கனல்வாள் விழி - நெற்றிக்கண். இரித்து - கெடுத்து. சடிலம் - சடை.

(61)

 பிற்றைப்பொழு திந்திரன் வேதனரி
           பெரிதேத்தியக் கங்கைத னிற்சிறிது
 பற்றித்தர வுய்த்தனர் தம்பதியிற்
           பயில்வித்தனர் தாழ்ந்தப கீரதனுக்
 கற்றந்தவிர் வேதன கர்க்கதுவு
           மக்கங்கையை யேவவெ குண்டிழிய
 முற்றுஞ்சடை யேற்றத னிற்சிறிது
           முந்நீர்புக மண்முக முய்த்தனனே.

(இ - ள்.) பின்னொரு காலத்தே இந்திரனும் பிரமதேவனும் திருமாலும் இறைவனைப் பெரிதும் வழிபாடு செய்து அக்கங்கையிற் சிறிது சிறிது இறைவன் வழங்குதலானே தத்தம் உலகத்தே செலுத்திப் பயிலச் செய்தனர். தன்னை வழிபட்ட பகீரதனுடைய வருத்தத்தை அகற்றக் கருதிய பிரமதேவன் தன்னுலகத்தேயுள்ள அந்தக் கங்கையை ஏவா நிற்ப அக்கங்கை வெகுண்டு இழியா நிற்றலாலே இறைவன் அக்கங்கை முழுதையும் தன் சடையிலே ஏற்றருளி அதன் சினந்தவிர்த்துப் பின் அதனில் ஒரு சிறிது கடலிலே புகுதற் பொருட்டு நிலவுலகத்திலே செலுத்தியருளினன்.

(வி - ம்.) வேதன் - பிரமன். அற்றம் - துன்பம். முந்நீர் - கடல்.

(62)

 இருபத்தெழு மாதரை யீன்றுகடி
           யினிதாற்றியெல் லாருழி யுஞ்சமனாய்
 மருவித்திகழ் கென்றரு டக்கன்மொழி
           வழுவிப்படு சாபம ரீஇத்திவளும்
 உருவிற்கலை தேய்ந்தொரு வான்கலையோ
           டுற்றுப்பணி யக்கலை யேறிமுறை
 பெருகக்கதிர் வேணிம லைத்தெவரும்
           பிறைசூடியெ னும்பெயர் பூண்டனனே.

(இ - ள்.) தக்கன் இருபத்தேழு மகளிரைப் பெற்றுத் திங்களுக்குத் திருமணமும் நன்கு செய்வித்து நீ இவரனைவர்பாலும் சமநோக்குடன் சேர்ந்து வாழ்வாயாக என்று அறிவுறுத்து விடுப்ப அத்திங்கட்டேவன் அம்மொழியைப் பேணாது வழுவியதனாலே அத்தக்க னிட்ட சாபத்தைப் பெற்று விளங்காநின்ற தன் மேனியிலே கலைகள் ஒவ்வொன்றாகத் தேய்ந்தொழிய எஞ்சிய ஒற்றைக் கலையோடு இறைவனைத் தஞ்சம் புகுந்து பணிய அக்கலைகள் நாடோறும் முறையாக வளரும் பொருட்டு இறைவன் தனது ஒளியுடைய சடையிலே அவ்வொரு கலையாகிய பிறையினைச் சூடி உலகத்தோர் பிறைசூடி என்னும் ஒரு திருப்பெயரையும் பூண்டருளினன்.