பக்கம் எண் :

1396தணிகைப் புராணம்

(வி - ம்.) மாதர் - அசுவினி முதலிய மீன்மகளிர். திங்கள் என்னு மெழுவாய் வருவித்துரைக்க.

(63)

 சுரர்தானவர் போர்புரிந் தெண்ணிலர்க
           டொலையத்தொலை யாதம ராடவுசாய்
 அரிநான்முக னோடருள் பெற்றிலரா
           யழுந்தார்கலி யைக்கடை யக்கடுவந்
 தெரிசீதமெ னக்கன லக்கடுகி
           யெவருஞ்சர ணென்றுவி ழுந்தயர
 வரநீடிய வெந்தைமி டற்றிருவி
           மனைமாதர்மி டற்றணி காத்தனனே.

(இ - ள்.) தேவர்களும் அசுரர்களுந் தம்முட் போர்புரிந்துழி இரு திறத்தும் எண்ணில்லாத தேவரும் அசுரரும் மாளாநிற்றல் கண்டு இனிப் போரின்கண் மாளாதிருந்து போர் செய்தற்குரிய உபாயத்தை இருதிறத்தோரும் கூடி ஆராய்ந்து தெளிந்து திருமாலும் பிரமனுமாகிய இரு தேவரோடும் கூடி ஆராய்ந்து இறைவனுடைய திருவருளைப் பெறாதாராய் ஆழ்ந்த திருப்பாற் கடலைக் கடையாநிற்ப அக் கடலிலே நஞ்சுதோன்றிச் சுடுகின்ற கடல் என்று கூறும்படி சுடா நிற்பத் தேவர் முதலியோர் விரைந்து எம்பெருமான்பால் சென்று அபயமென்று விழுந்து வருந்தா நிற்ப எம்பெருமான் அந் நஞ்சத்தை வாரிவிழுங்கித் தன் மிடற்றிலிருத்தி வானவர் மனைவியர் கழுத்துமங்கல வணியைப் பாதுகாத்தனன்.

(வி - ம்.) உசாய் - ஆராய்ந்து. அருள் - சிவபிரான் அருள்.

(64)

 அல்வேறுப டுக்குமு ழுச்சுடர்போ
           லடராணவ நீக்கரு ளைந்தொழில்கட்
 கொல்வேறுரு வம்பல கொண்டருளு
           முவையன்றியு மெண்ணிலு யிர்த்தொகையும்
 பல்வேறியல் புள்ளன வேயதனாற்
           பயிலும்பரி பாகம தற்கியையச்
 சொல்வேறுரு வுந்தொழி லும்பெயருந்
           தொலையாவரு ளெந்தைதொ டங்கினனே.

(இ - ள்.) இருளை அகற்றா நின்ற முழுஞாயிறு போன்று செறிந்த ஆணவ மலத்தினை அகற்றுதற் பொருட்டுத் தனது பேரருளாலே இயற்றுகின்ற படைப்பு முதலிய ஐவேறு வகைத் தொழிலின்கண் வேறு வேறான பல வுருவங்களை எம்பெருமான் மேற்கொண்டருளுவன். இவையேயன்றியும், எண்ணிறந்த உயிர்த் தொகுதிகள் தாமும் பலவேறு பண்புடையனவாகலான் அவை பயின்றெய்திய பரிபாகத்திற் கேற்பவும்