(இ - ள்.) அதுகேட்ட திருமால் இக்காரியம் என்னாலியலுவ தொன்றன்று என்று கூறி அப்பிரமன் முதலியவரோடு சிவபெருமான் பாற் சென்று வணங்கிப் பிரமதேவனுடைய வேண்டுகோளை விளம்பா நிற்ப, எம்பெருமான் சனகன் முதலிய அந்த நான்கு முனிவரையும் பிரம தேவனையும் திருமாலையும், தனது நெற்றிக்கண்ணை விழித்து விளங்கா நின்ற, திருவெண்ணீறாக்கித் தனது இடப்பாகத்துத் திண்ணிய திருத்தோளின் கண்ணதாகிய தனது திருவருளே உமையாக வரும்படி திருநோக்கருளி அங்ஙனமே உமையாகி வந்தவளைத் தன்னிடப்பாகத்தே வைத்து அவளுடைய பொன்னணிகலன் பொருந்தியமுலைகளை முயங்கிப்பின் நீறாக்கிக் கொன்ற சனகன் முதலியோரை உயிர்ப்பித்து அவருள் திருமாலை நோக்கிப் பின்வருமாறு கூறுகின்றான். (வி - ம்.) இறை - சிவபெருமான். புடை - பக்கம். பொன் அணிகலன். பூத்து - படைத்து. ஐம்படையான் - திருமால். (69) | அருளாகிய மாதிட மொன்றுதலா | | னலரோன் செயன் முற்றுமி னிப்பெயர்கென் | | றருளாலருள் செய்யவ ணங்கியவ | | ரகல்வுற்றன ராரணி யெம்பெருமான் | | ஒருவாதுமை மாதொடி ருத்தலினா | | லுறுகாதலி னாணொடு பெண்கள்பிணைந் | | திருநீர்ப்புவி யாதிய வெவ்வுலகு | | மின்புற்றுயி ரீண்டிய தான்முனியே. |
(இ - ள்.) எமது அருளாகிய இறைவி எமது இடப்பாகத்தே சேர்ந்திருத்தலானே இனிப் பிரமதேவனுடைய படைத்தற்றொழில் நிறைவேறுதல் ஒரு தலையாகலான் இனி நீயிர் செல்லுமின் என்று தனக்கியல்பான அருளாலே பணிப்ப அவரும் பெருமானை வணங்கிப் போயினர். முனிவனே ! ஆத்திமாலை சூடிய எம்பெருமான் உமையன்னையாரோடு பிரிவின்றிக் கூடியிருத்தலானே பெரிய கடல் சூழ்ந்த நிலவுலக முதலிய எல்லாவுலகத்தினும் உயிரினங்கள் ஆணும் பெண்ணுமாகித் தம்முள் மிக்க காதலானே கூடி இன்புற்று மக்கட்பெற்று மல்குவன வாயின. (வி - ம்.) அலரோன் - பிரமன். ஆர் - ஆத்திமாலை. ஊறு - மிகுதி. (70) | தனக்கென்றெது வும்புண ராவியல்பிற் | | றனிஞானமு தற்பொரு ளானபிரான் | | அனைத்துங்கரி சான்றவு யிர்த்தொகுதிக் | | கருளுங்கரு ணைத்திற மென்றறிதி |
|