பக்கம் எண் :

140தணிகைப் புராணம்

(இ - ள்.) மறைவாகி உயிர்கள் பிறத்தற்குரிய இடக்கரவயவமே தங்களுக்குத் தோன்றுமிடமாகி அழகிய முதன்மையுடைய பிரமாவினிடத்துத் தோன்றியதற்குப் பொருந்த வியாபார முறையான் வரும் இரகசியங்களை ஏனையோரிடத்து மூவகையுலகமும் ஒருசேரக்கிடைக்குமேனும் கூறாது அருமையாகிய செல்வத்தினையுளவாக்கி (ஆன்மாக்களுய்யும் வண்ணம்) உண்மை நூல்கள் வகுத்துச்சொல்லிய ஒழுக்கினின்றும் பிறழ்ச்சி யடையாமல் வாணிக முறையில் முயலுபவராகிய வணிகர் வீதிகள் பலவாகும்.

(வி - ம்.) குய்யமாய் - மறைவாய். குறி - பிரமன் இடக்கர் அவயவம். மறை - தாங்கொண்ட பொருளின் விலையைப் பிறர்க்குக் கூறாது மறைத்தல். உழத்தல் - முயன்று தொழில் செய்தல்.

(102)

 பகைமுழு திரிக்கு மத்திரஞ் சுமந்த
           பங்கயத் தொங்கறாழ் புயத்துத்
 தகையழ கெறிப்ப நான்மறைக் கிழவன்
           றந்திட வந்தகா ரணத்தால்
 புகையழற் பொறிக டும்முவான் படைகள்
           புயத்தினி தேந்திமே வார்தம்
 மிகைதணித் துலகிற் குடைநிழல் பரப்பும்
           வேந்தர்வாழ் வீதிகள் பலவால்.

(இ - ள்.) பகைவர்களை யெல்லாம் கெடச்செய்யும் அம்புகளைத் தாங்கிய தாமரை மலர்களா லாகிய மாலை தாங்கிய புயத்தினின்றும் நான்கு வேதத்திற்குரிய பிரமன் உளவாக்க மிக்க அழகு வீசாநிற்கத் தோன்றிய காரணத்தினாலே தூமத்தோடு கூடிய தீப்பொறிகளைக் கக்குகின்ற பெருமைபொருந்திய ஆயுதங்களை இனிதாகப் புயத்திற்றாங்கிப் பகைவர்களுடைய செருக்கையடக்கி உலகத்தினிடையே வெண்கொற்றக் குடையினால் நிழலைப் பரவச்செய்யும் அரசர்கள் வாழும் வீதிகள் பலவாகும்.

(வி - ம்.) நான்மறைக் கிழவன் புயத்து அழகெறிப்பத் தந்திட வந்த காரணத்தா லென்க. தகையழகு - மிக்க அழகு. தும்மு - கக்குகின்ற. மிகை - செருக்கு.

(103)

 இருமையு மளிக்கு மொழுக்கெலாந் தெரிக்கு
           மிருமறை யெழுந்தவாண் முகத்துப்
 பொருவரு வேதக் குரிசின்முன் னுயிர்ப்பப்
           போக்கறப் பொலிந்தகா ரணத்தால்
 ஒருமையி னோத லாதியா வுரைத்த
           வுயர்தொழி லாறினுஞ் சிறந்து
 பெருமையின் மறையோ ரெனும்பெயர் தமக்கே
           பெற்றவர் வீதிகள் பலவால்.