பக்கம் எண் :

திருநகரப் படலம்141

(இ - ள்.) இம்மை மறுமைப் பயன்களைக் கொடுக்கு மொழுக்கங்களை யெல்லாம் தெரிவிக்கும் பெரிய வேதங்கள் தோன்றிய ஒளி பொருந்திய முகத்தினிடத்து ஒப்பற்ற வேதத்தலைவனாகிய பிரமன் யாவரினு முற்பட உளவாக்கக் குற்றமின்றி விளங்கிய காரணத்தினால் ஒருமைப்பாட்டுடனே ஓதலை முதலாகக் கூறிய உயர்ந்த அறுவகைத் தொழிலினும் சிறப்புற்றுப் பெருமையினாலே மறையோரென்னும் பெயரைத் தங்களுக்கே யன்றி (வேறொருவர்க்கில்லாமல்) பெற்றவர்களாகிய மறையவர் வீதிகள் பலவாகும்.

(வி - ம்.) இருமை - இம்மை, மறுமை. பொருவரும் - ஒப்பற்ற. போக்கு - குற்றம். "போக்கின்றென்ப வழக்கினுள்ளே" எனும் தொல்காப்பியச்
சூத்திரத்தா னறிக.

(104)

 அருள்வளங் கொழிக்கு மைந்தொழி லாக
           வடங்கிய சிறப்பொடு பூசை
 மருவுமெவ் வகையு மாகம வழியான்
           மயரறத் தெளிந்தவர் வரையாச்
 சுருதிகண் மிருதி புராணமெக் கலையுந்
           துகளறத் தெரிந்தவ ரிறைவன்
 தருதிரு மேனி தீண்டிடு மாதி
           சைவர்வாழ் வீதிகள் பலவால்.

(இ - ள்.) அருளின் பெருக்கத்தைச் சொரிகின்ற ஆக்க லழித்த லருளல் காத்தல் மறைத்த லென்னும் ஐவகைத் தொழிலாக அடங்கிய விழாவொடு பூசைக்குப் பொருந்திய எவ்வகைப்பட்ட கிரியைகளையு மாகமசாத்திர வழியான் மயக்கமறத் தெளிந்தவர்கள். எழுதாத வேதங்கள் மிருதிகள் புராணங்கள் முதலிய எல்லாக் கலைகளையும் குற்றமற அறிந்தவர்கள் சிவபெருமானுடைய இன்பினைத் தருகின்ற திருமேனியை முப்பொழுதும் தீண்டுபவர்களாகிய ஆதி சைவர்கள் வாழ்கின்ற வீதிகள் பலவாகும்.

(வி - ம்.) சிறப்பு - விழா. எவ்வகையும் - எவ்வகைக் கிரியைகளையும். மயல் - மயக்கம். துகள் - குற்றம். வரையாச்சுருதி-எழுதாத வேதம்.

(105)

 கரிசறு கவிக்குக் கவிகம கனுக்குக்
           கமகன்வா திக்கொரு வாதி
 துரிசறு வாக்கி தனக்கொரு வாக்கி
           யாயவர் தொன்றுதொட் டமைந்து
 வரிசையின் வந்த கேள்வியர் பொறாது
           வருமிகல் கடந்தவெஃ குடையார்
 பரிசினூற் பயிற்சி யின்பெனக் கலைதேர்
           பட்டிமண் டபம்பல வயங்கும்.