பக்கம் எண் :

1402தணிகைப் புராணம்

(இ - ள்.) பிரம தீர்த்தத்தினும், புதன்கிழமை தேன் சொரியும் செங்கழுநீர் மலருந் தீர்த்தத்தும் வியாழக்கிழமையினும் வெள்ளிக் கிழமையினும் பரவா நின்ற புகழையுடைய குமார தீர்த்தத்தினும் கூறப்படும் சனிக்கிழமை பெரிய அகத்தியன் சுனையினும் பொருந்தி அவ்வகோர வந்தணன் ஆடினன்.

(வி - ம்.) காவி - செங்கழுநீர். சீர் - புகழ். உரவு - பெரிய.

(76)

 அருளி னால்வர மவரவர் பூண்டவந் நாளும்
 வருவ தோர்ந்துபுக் காடினன் வயங்குமேழ் சுனையும்
 பரிதி வாரமுன் னாகவொவ் வொன்றுறப் படிந்தான்
 பொருவி லந்தணி ருய்பவ ரிம்முறை போற்றல்.

(இ - ள்.) இறைவன் திருவருளாலே பின்னரும் பிரமன் முதலியோர் வரம்பெற்ற அவ்வந்நாளும் வருவதனை ஆராய்ந்து அவ்வச்சுனையிற் சென்று ஆடா நின்றனன். திகழா நின்ற இந்த ஏழு சுனைகளினும் ஞாயிற்றுக்கிழமை முதலாக ஒவ்வொன்றினுமாடா நின்றனன். ஒப்பற்ற அந்தணர்களே பிறவிப் பிணியினின்றும் வீடுபெற்றுய்யக் கருதிய சான்றோர் இம் முறையானே இவையிற்றில் ஆடுவாராக.

(வி - ம்.) பொருவில் - ஒப்பற்ற. போற்றல் - வியங்கோள்.

(77)

 விதித்த நாளிடை மிகுபயன் விளைப்பவென் றுள்ளம்
 மதித்தி டீரெந்த வாரத்தெப் புனல்படிந் தேனும்
 கொதித்த வேல்வலக் குமரனைக் கும்பிடுந் தவத்தோர்
 கதித்த தீவினை கடந்துபே றெனைத்தையும் பெறுவார்.

(இ - ள்.) நூலிலே விதிக்கப்பட்ட நன்னாளிலே ஆடின் மிக்க பயனை விளைவிப்பன என்று கருதுவீராக. இனி எந்தக் கிழமையே யாகுக. எந்த நதியே யாகுக, ஆடிச் சினந்த வேற்படையின் வெற்றியுடைய குமாரப் பெருமானைக் கும்பிடுந் தவமுடையோர், தம்பாற் றோன்றிய தீவினைகளனைத்தையும் கடந்து சிறந்த பேறுகளனைத்தையு மெஞ்சாது பெறுகுவர் என்றுணர்க.

(வி - ம்.) விதித்த நாள் - நூல்கள் விதித்த நன்னாள். தவமுந்தவ முடையோர்க்கேயாகலின், கும்பிடுந் தவத்தோர் என்றார்.

(78)

 என்று சூதமா முனிவர னியம்பினன் வணங்கி
 அன்று கேட்டமா தவரனை வோர்களும் வேள்வி
 நன்று முற்றிய பின்னர்நற் றணிகையை நண்ணி
 வென்றி வேலவற் றொழுதின்ப விளைவினை விளைத்தார்.