(இ - ள்.) என்று இவ்வாறு சூதமுனிவன் செவியுறுத்தருளினனாக ; இவற்றைக் கூர்ந்து கேட்ட பெரிய தவத்தையுடைய முனிவர் அனைவரும் அம்முனிவனை வணங்கிய பின்னர் வேள்வியியற்றி அத்தொழில் நன்கு முற்றிய பின்னர் நன்மையுடைய திருத்தணிகை மலையினை எய்தி வெற்றிவேலை ஏந்திய முருகப்பெருமானை வணங்கி இன்பம் விளைக்கும் தவத் தொழிலை ஆற்றியிருந்தனர். (வி - ம்.) நன்று - பெரிது. இன்பவிளைவு - தவத்தொழில். (79) வேறு | பூமேவு நான்முகத்தோன் முதற்றொழிலு | | மணிமார்பன் புரப்புந் தெய்வத் | | தேமேவு நறுங்கடுக்கை யரன்பணியு | | மீசரவர் செயலுந் தூயோர் | | நாமேவு செழுமறையா கமமனைத்து | | நவின்றவர்நல் லருளு மெல்லாம் | | தாமேயென் றவரவராய்ப் புரிந்தருளு | | மொருமுதல்வன் சரணஞ் சார்வாம். |
(இ - ள்.) தாமரை மலரிலே வீற்றிரா நின்ற நான்கு முகங்களை யுடைய பிரமதேவனுடைய படைத்தற்றொழிலும் கௌத்துவ மணியணிந்த மார்பையுடைய திருமாலுடைய காவற்றொழிலும் கடவுட் டன்மையுடைய தேன் பொருந்திய நறிய கொன்றை மாலையணிந்த சிவபெருமானுடைய அழித்தற்றொழிலும், ஆகிய இம் முப்பெருங் கடவுளர் செயலும், தூய்மையுடையவரின் நாவிலே பொருந்தா நின்ற செழிப்புடைய வேதங்களும் சிவாகமுமாகிய அனைத்தையும் செவியறிவுறுத்தவருடைய நல்ல அருட்செயலும் ஆகிய எல்லாச்செயற்கும் முதல்வன் தானேயாய் அவரவராகி இயற்றியருளா நின்ற ஒப்பற்ற முழு முதல்வனுடைய திருவடிகளை வணங்குவேம். (வி - ம்.) பூ - தாமரைப்பூ. மணி - கௌத்துவ மணி. புரப்பு - காவல். தேம் - தேன். கடுக்கை - கொன்றை. (80) | தொழும்பினரை யுடையவர்க ளாள்வதுறு | | கடனென்னுந் தொல்லை மாற்றம் | | செழும்பவள விதழ்மடவார் திறத்தழுந்து | | மெனதுளத்தைத் திருப்பித் தன்சீர்க் | | கொழும்புகழி னினிதழுத்திப் புதுக்கியரு | | டணிகைவரைக் குமரன் பாதம் | | தழும்புபடப் பலகாலுஞ் சாற்றுவதல் | | லாற்பிறர்சீர் சாற்றா தென்னா. |
|