பக்கம் எண் :

திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி்1483

நிறைந்தளாய் பேரறிவாய் முதல் ஆகிய மணாளனை அழுத்தும் உள்ளத்தவர்க்கு அஞர் இல்லை. ஏ - அசைநிலை.

முருகனை இடைவிடாது நினைப்பவர்களுக்கு ஒரு போதும் துன்பம்
உண்டாகாது.

(1)

 இல்லை தெய்வமு முயிருமற் றில்லெனும்
 அல்லை வென்றொளி யாக்குவ தென்பவே
 நல்ல சீர்த்தணி கைக்கொரு நாயகன்
 சொல்லு லாவுஞ் சுடர்க்கழற் பாதமே.

(கு - ரை.) அல் - இருள், அறியாமை. ஒளி - வெய்யில், பேரறிவு. சொல் - புகழ். நாயகன் பாதமே அல்லை வென்று ஒளியாக்குவது என்ப என்று கூட்டிப் பொருள் கொள்க.

முருகன் திருவடி அன்பர்களுக்கு அறியாமையைப் போக்கி அறிவை
நல்கும்.

(2)

 பாத நான்குமப் பாத பயன்களும்
 ஓது நூலு முணர்த்து முரவனும்
 யாது மாயெனை யுந்தடுத் தாண்டனன்
 வேத மார்க்குந் தணிகை விமலனே.

(கு - ரை.) பாதம் நான்கு - சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன. ஓதும் நூல் - சைவ ஆகமங்கள். உணர்த்தும் உரவன் - ஞானாசிரியர். விமலன் - இயல்பாகவே குற்றங்கள் அற்றவன்.

நான்கும், பயன்களும், நூலும், உரவனும், யாதுமாய் விமலன் எனையும் தடுத்து ஆண்டனன் என்க.

(3)

 விமல மாயுயிர் தோறும் விராய்நின்றும்
 கமல நாரணன் காட்சிக் கரியவன்
 திமில மாமறை தெள்ளுந் தணிகையில்
 அமல மேனிகொண் டாட்டய ரண்ணலே.

(கு - ரை.) விமலம் - தூய்மை. விராய் நின்றும் - கலந்து நின்றாலும், கமலநாரணர் - கமலனும் நாரணனும் (நான்முகனும் திருமாலும்.) காட்சிக்கு - காணுதற்கு, திமிலம் - ஒலி. தெள்ளும் - ஆராயும். அமலமேனி - குற்றமற்ற உடல் (அறிவுருவம்). ஆட்டு - திருவிளையாடல், அயர் அண்ணல் - செய்து வரும் முருகன்.

நின்றாலும் என்பது 'நின்றும்' எனத் திரிந்து நின்றது.

தணிகையில் மேனி கொண்டு ஆட்டு அயர் அண்ணல் விமலமாய் விராய் நின்றும் காட்சிக்கு அரியவன் ஆயினன் என்க. ஆயினன் என்பது வருவித்து உரைக்கப்பட்டது.