பக்கம் எண் :

திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி்1485

பொருள் கொள்க, 'ஓத' என்பதன் இறுதி அகரம் தொக்கது. ஒற்றித்து - ஒன்றாகச் சேர்த்து. மாதர் - அழகு. காவிவரை - திருத்தணிகைமலை. 'வரைத்தலை' - தலை : ஏழனுருபு.

மன்னன் நீவி ஒருவித் தனது பதத்து ஒற்றித்து உணர்த்தினான் என்க. ஒருவனுக்குத் தன்னைப் பற்றிய அறிவு (உடம்பேதான் என்னும் அறிவு) இருப்பின் அது வீடுபேற்றுக்குத் தடையாகும் என்பது கருத்து.

(7)

 மன்னு மண்டமு மற்றவை போர்த்ததோர்
 நன்னர் நீருநற் பூதமும் யாவையும்
 தன்ன தாணையிற் றங்க நிறீஇயினான்
 கொன்னும் வேற்கைத் தணிகைக் குமரனே.

(கு - ரை.) மன்னும் அண்டமும் - நிலைபெற்றுள்ள உலகமும் போர்த்தது - சூழ்ந்துள்ளதாகிய. நீரும் - கடலும். பூதமும் யாவையும் - ஏனைய அனல், வளி, வான் ஆகிய பூதங்களும் பிற பொருள்களும்.

தணிகைக் குமரன் அண்டமும், நீரும், பூதமும், யாவையும் தன்னது ஆணையில் தங்க நிறீஇயினான் என்க.

(8)

 குமர ராய்ப்புறங் கூனுங் கிழவராய்
 அமர ராதி யனைவரும் பொன்றினும்
 சமர வேற்கைத் தணிகைப் புராதனன்
 நமரங்கா ணந்தல் செல்லாக் கடவுளே.

(கு - ரை.) குமரர் - இளமைப் பருவமுடையோர். புறம் - முதுகு. அமரர் - தேவர். பொன்றினும் - இறந்தாலும். சமரம் - போர். புராதனன் - பழமையானவன். நந்தல் செல்லா - அழிவு இல்லாத.

நமரங்காள், குமரராய்க் கிழவராய் அனைவரும் பொன்றினும் தணிகைப் புராதனன் நந்தல் செல்லாக் கடவுளே ஆவன் என்க.

(9)

 கடவு ளாயவர் காசினி மாந்தராய்
 மடவ மாந்தர்கள் வானவ ராயுறப்
 படர்வி னைப்பய னல்கும் பராபரன்
 இடன கன்ற தணிகை யிறைவனே.

(கு - ரை.) கடவுளர் - தேவர். மாந்தர் - மக்கள். வானவர் - தேவர். படர் வினைப்பயன் - தன்னைச் செய்தவர்களைவிடாது தொடர்ந்து வரும் வினையின் பயன்.

கடவுளாயவர் மாந்தராய். மாந்தர்கள் வானவராய் உற வினைப்பயன் நல்கும் பராபரன் தணிகை இறைவனே ஆவான்.

(10)