| இறைகொண்டு தேவர் மகவான் விரிஞ்ச | | னிருள்மேனி மாயன் முதலோர் | | நறைகொண் டலர்ந்த மலர்தூவி யுள்ள | | நவைசிந்தி நாளு முயல | | அறைவண்டு பாட லிமிழ்காவி வெற்பின் | | வெளிநின்ற வாறு முகவன் | | மறைகண்டி லாது தடுமாற மல்கு | | மறுவற்ற சோதி மயமே. |
(கு - ரை.) இறை கொண்டு - வழிபடு கடவுளாகக் கொண்டு. மகவான் - இந்திரன். விரிஞ்சன் - நான்முகன். மாயன் - திருமால். நறை - தேன். நறுமணம். நவை - குற்றம். நாளும் முயல - நாள்தோறும் வழிபாடு செய்துவர. மறை - வேதம். சோதி மயம் - ஒளி வடிவம். மாயன் முதலோர் மலர் தூவி நவை சிந்தி நாளும் முயல வெளிநின்ற ஆறுமுகவன் மறை கண்டிலாது தடுமாற மல்கு சோதி மயமே ஆவான். 'ஆவான்' என்பது வருவித்து உரைக்கப்பட்டது. (11) | மயனார் விதித்த வுலகுஞ் சமழ்ப்ப | | வளமொய்த்து வீதி யொழுகி | | வியனா லயங்கள் பலதுன்றி வேத | | விதிபம்பி யோசை யணவிப் | | புயன்மீ யடுத்த தணிகைச் சிலம்பு | | பதியாக வைகு புகழோன் | | அயன்மால் பதங்க ளவைவைத்து வாங்கு | | மயர்வற்ற ஞான முதலே. |
(கு - ரை.) மயன் - அசுரத்தச்சன். சமழ்ப்ப - நாண. மொய்த்து - செறிந்து. வியன் ஆலயங்கள் - பெரிய கோயில்கள். பம்பி - நெருங்கி. அணவி - பொருந்தி. மீ - மேல். அயன் - நான்முகன். பதம் - பதவி, உலகம். உலகும் சமழ்ப்ப மொய்த்து ஒழுகி துன்றி பம்பி அணவி அடுத்த தணிகைச் சிலம்பு வைகு புகழோன் பதங்க ளவை வைத்து வாங்கும் ஞான முதலே என முடித்துப் பொருள் கொள்க. மொய்த்து ஒழுகி துன்றி பம்பி அணவி என்னும் சினைவினை எச்சங்கள் அடுக்கி முதற்பொருளின் செயலையுணர்த்தும் 'அடுத்த' என்னும் பெயரெச்சத்தைக் கொண்டுமுடிந்தன. (12) |