பக்கம் எண் :

1488தணிகைப் புராணம்

 உறந்தார்வ முற்றி மடவோரு நூல்க
           ளுணர்கின்ற மேதை யவரும்
 துறந்தாரும் யாரும் விடை கொள்ள
           வேறு துகடீர்க வென்று மிடைவுற்
 றிறந்தார்க ளேத்தும் விழவோ விலாத
           வெழிறுன்று காலி வரையோன்
 சிறந்தாவி தோறு முடனாகி யைந்து
           செயலுஞ் செயும்ப கவனே.

(கு - ரை.) உறந்த ஆர்வம் முற்றி - விரும்பிய அனைத்தும் கைகூடப் பெற்று. மடவோர் - பொதுமக்கள். மேதையர் - பேரறிஞர். துறந்தார் - முனிவர். விடை கொள்ள - அனுமதி பெற்றுக் கொண்டு செல்ல. ஏறுதுகள் தீர்க - வளர்ந்துவரும் தீமைகளைப் போக்கியருளுக. மிடைவுற்று - மிக நெருங்கி. இறந்தார்கள் - அளவிறந்த மக்கள். ஓவு இலாத - நீங்காத. ஆவிதோறும் உடனாகி - எல்லா உயிர்களிலும் கலந்து நின்று. பகவன் - கடவுள்.

ஐந்தொழில் (ஐந்து செயல்) - படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன.

மடவோரும் மேதையவரும் துறந்தாரும் யாரும் ஆர்வம் முற்றி விடை கொள்ள இறந்தார்கள் மிடைவுற்று ஏறுதுகள் தீர்க என்று ஏத்தும் விழவு ஓவிலாத எழில் துன்று காவி வரையோன் ஆவிதொறும் உடனாகி ஐந்து செயலும் செயும் பகவனே என இயைத்துப் பொருள் கொள்க.

இதனால் அடியார்களுக்கு முருகன் அருளும் திறம் கூறப்பட்டது.

(15)

 பகலோன் மழுங்க வொளிவீசு மேனி
           பழிவீசு மாசு முழுக
 இகலேறு வில்லி னொருகாளை யாகி
           யெழிலேறு வள்ளி யடியில்
 தகவீழ்ந் திறைஞ்சி யிளிவந்து நின்ற
           தணிகைப் பொருப்பி னிளையோன்
 பகர்போக வின்ப முயிர்தோறு நல்கும்
           பரபோக வின்ப வுருவே.

(கு - ரை.) பகலோன் - கதிரவன். பழிவீசு - பழியை எங்கும் பரப்புகின்ற. மாசு - அழுக்கு. இகல் ஏறு - வலிமை மிக்க. இளிவந்து நின்ற - 'அருளுக' என இரந்து நின்ற. பகர் - புகழ்ந்து கூறப்படுகின்ற. பரபோக இன்ப வடிவு - பேரின்பமாகிய வீடுபேறாக உள்ள ஆனந்த வடிவினனேயாவான்.