பக்கம் எண் :

திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி்1491

(கு - ரை.) உவந்து அவாவும் - மிக விரும்பி ஒழுகும். அகவிருள் - அறியாமை. ஒள்ளொளி - மிக்க ஒளி. (பேரறிவு, ஞானம்) வாள் நிவந்த ஆதவன் - ஒளி மிக்க பகலோன். நிராமயன் - கடவுள். தவாது - கெடாது.

மாதரார் முலையை அவாவும் அகவிருள் ஒதுக்கி ஒள்ளொளி தரும் நிராமயன் தணிகையான் என்ப தக்கோர்கள் என இணைத்துப் பொருள் கொள்க.

'வாள் நிவந்த ஆதவன்' நிராமயனுக்கு உபமானம்.

(21)

 கள்ளு லாங்குழற் கொடிச்சிதோள் காமுறு மறுகாற்
 புள்ளு லாங்குவ ளைப்புயத் திறைவர்பூந் தணிகை
 உள்ளு லாங்களி யன்பரா யுறினிழிந் தோரும்
 வள்ளு லாங்கதிர் வேலராய் வானவ ராவார்.

(கு - ரை.) கள் உலாம் குழல் - தேன் நிறைந்த மலர்மாலை யணிந்த கூந்தல். கொடிச்சி - குறிஞ்சி நிலப்பெண் (வள்ளி நாச்சியார்) அறுகாற் புள் - வண்டு. உலாம் - உலாவும். வள் - பெருமை. வேலராய் - முருகனை வழிபடுவோராய். வானவர் - தேவர். 'குறமின் கொடியைப் புணரும் குணபூ தரனே' என்பதனாலும் முருகன் வள்ளிபால் காதல் கொண்டு ஒழுகினமை விளங்கும்.

தணிகையுள் உலாம் அன்பராய் உறின் இழிந்தோரும் வேலராய் வானவர் ஆவார் என்க.

(22)

 வார ணிந்தபூண் முலையினார் மையலா யதனாற்
 போர ணிந்தெழு நோய்களும் போக்கரு வினையும்
 கூர ணிந்தவேற் றணிகையிற் குமரனைக் குறுகா
 ஆர ணிந்தவை யகத்தெவ ரிருக்கவல் லுநரே.

(கு - ரை.) வார் - கச்சு. முலையினார் மையல் ஆய் அதனால் - முலையினார்பால் மையல் பூண்டு அவர்களைக் கலந்து ஒழுகியதனால். போர் அணிந்து எழு - பொருது துன்புறுத்துவதற்காக வரிசை வரிசையாக வருகின்ற. கூர் அணிந்த - கூர்மை பொருந்திய. குறுகா - நெருங்கா. ஆர் அணிந்த - நெருப்புப் பற்றி எரிகின்ற. வையகத்து - வைக்கோலால் வேயப் பெற்ற இல்லத்தினுள். இருக்க வல்லுநர் எவர் என மாற்றுக. 'ஆர்' என்பது ஆரல் என்பதன் கடைக்குறை. ஆரல் - நெருப்பு.

மகளிர் கலவியால் உற்ற நோய்களும், தீவினைகளும் தணிகை நாதனை அடைந்த அளவில் நீங்கிவிடும் என்பது கருத்து.

'ஆரணிந்த வையகத்தெவ ரிருக்க வல்லுநரே' என்பது உபமானம். 'தேரணிந்த வையகத்து' என்ற பாடம் பொருந்தாமை காண்க.

(23)