பக்கம் எண் :

1492தணிகைப் புராணம்

 வல்ல மாதவர் குழாங்களும் வானவர் குழுவும்
 சொல்லு லாமறைத் துதிகொடு பரவுபூந் தணிகை
 அல்ல ராவிய மேனியா னடிதொழப் பெற்றோர்க்
 கில்லை யாம்பொரு ளெவ்வுல கத்தினு மிலையால்.

(கு - ரை.) வல்ல மாதவர் - எண்ணியவற்றை எண்ணியாங்கு இயற்றவல்ல முனிவர்கள். சொல் உலாம் - பரந்த புகழையுடைய. மறைத்துதி கொடு - மந்திரங்களைச் சொல்லி வழுத்தி. அல் அராவிய மேனியான் - இருளைப் போக்கிய திருவுரு உடையான். 'ஆல்' - அசைநிலை.

முருகன் திருவடியை வணங்குவோர் எல்லாச் செல்வமும் எய்துவர் என்பது கருத்து.

(24)

 ஆல நீழலி லரனென நால்வருக் கருளும்
 கோல மேனியெங் குருபரன் குளிர்பொழிற் றணிகை
 சால வோங்கிய குமரவேள் சரண்டொழப் பெறாதார்
 ஞால மீதுபல் வினைகளு நலிதுயர் பெறுவார்.

(கு - ரை.) ஆல நீழல் - கல்லால மரத்தின் நிழல். சிவனருள் பெற்ற நால்வர் - சனகர், சனந்தனர், சனாதனர், சனற் குமாரர் என்பவர், சரண் தொழப் பெறாதார் - திருவடிகளை வணங்கப் பெறாதவர்கள். ஞாலம் - உலகம். முருகன் அருள் பெற்ற நால்வர் - நான்முகன் திருமால், சிவன். அகத்தியன் என்பவராவர்.

கவலையைப் போக்கும் மருந்து முருகன் திருவடியை வணங்குதலே ஆகும் என்பது கருத்து.

(25)

 பெறுவ தாவது பெரும்புன லுலகுவேட் டெவையும்
 உறுவ தாகிய தணிகையா னொலிகழற் சரணம்
 தெறுவ தாவது சேவலங் கொடியவ னருளான்
 மறுவ தாகிய யானென தெனுமிருண் மயக்கம்.

(கு - ரை.) பெறுவது ஆவது - அடைவதற்கு உரியது. பெரும்புனல் - கடல். வேட்ட எவையும் - விரும்பிய எல்லாப் பொருள்களையும். உறுவது - உறுவிப்பது. தெறுவது ஆவது - அழித்தற்கு உரியது. மறு - குற்றம். இருள் மயக்கம் - அறியாமை காரணமாக வரும் செருக்கு.

பெறுவதற்குரியது தணிகையான் சரணம்; தெறுவதற்குரியது யான் எனது எனும் மயக்கம் என்க.

(26)

 மயக்க மாமல வுருவமாம் வனமுலை மடவார்
 முயக்க மாகிய முளிகருஞ் சேதகப் பயம்பிற்
 புயக்க லாதுபோ யழுந்திய வருவினைப் புயக்கு
 நயக்க மேவருந் தணிகையா னலத்தரு மருளே.