பக்கம் எண் :

திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி்1497

தணிகையங் கடவுள் பாசம்பற்றியவாறும், மலந்தபுமாறும், கலந்து நிற்கும் காட்சியும் தெரித்து ஆட் கொண்டான் என்க.

(36)

 கடவுளர் வீரங் காற்றுங்
           கருமுருட் டவுணர்க் காய்ந்து
 குடர்நெடு மாலை வேய்ந்த
           குருதிவேற் றடக்கை யண்ணல்
 தடவரைத் தணிகை யோங்கல்
           சார்ந்தவ ரான்றோர் பண்டைப்
 படர்வினை முழுது மங்கிப்
           பஞ்சியி னுங்கக் காண்பார்.

(கு - ரை.) கடவுளர் - தேவர். வீரம் - ஆண்மை. காற்றும் - ஒழியுமாறு அழித்து இடையூறு செய்து வரும். கருமுருட்டவுணர் - மிகக் கொடிய அசுரர். குருதி - இரத்தம். புண்ணீர். அங்கி - நெருப்பு. 'குடர்' - குடல் என்பதன் போலி. 'தடக்கை' தட : உரிச்சொல். 'படர்வினை' : வினைத்தொகை. 'அங்கிப் பஞ்சு' - உபமானம். 'தணிகை சார்ந்தவர் பண்டைவினை' - உபமேயம். 'இன் ' : உவம உருபு. நுங்குதல் : பொதுத்தன்மை.

கடவுளர் வீரம் காற்றும் அவுணர்க் காய்ந்து மாலை வேய்ந்த வேற்கை அண்ணல் தணிகை ஓங்கல் சார்ந்தவராகிய ஆன்றோர் தம் பண்டை வினை முழுதும் அங்கிப் பஞ்சியின் நுங்கக் காண்பார் என்க.

(37)

 காண்பவர் காட்சி யெல்லாங்
           கலந்ததன் னியல்பே யாக
 ஏண்படு தணிகை யோங்க
           லிடமெனக் கொண்ட செம்மல்
 பூண்படு கருணை மேனி
           பொதுவறக் காண்ட லோடும்
 வீண்படு முலக மெல்லாம்
           விளிந்தியா னிறந்த வாறே.

(கு - ரை.) காட்சி - தோற்றம். கலந்த - கூடின. ஏண் - பெருமை, உயரம், செம்மல் - இறைவன் வீண்படும் உலகம் - பயனின்றிக் கழியும் உலகம். விளிந்து யான் இறந்தவாறே - அழிந்து தன் உடலையே தானாக மதிக்கும் 'யான்' என்னும் அகங்காரமும் ஒழிந்தது என்ன வியப்பு.

காண்பவர் காட்சி யெல்லாம் தன் இயல்பே ஆக ஓங்கல் இடம் எனக் கொண்ட செம்மல் மேனி காண்டலோடும் உலகம் விளிந்து யான் இறந்தவாறு என்ன வியப்பு என்க. என்ன வியப்பு என்பது வருவிக்கப்பட்டது.

(38)