பக்கம் எண் :

திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி்1499

வேறு

 வேண்டுவார் வேண்டுவ தருளு மெய்ம்மைசால்
 ஆண்டகை தணிகையம் மண்ண றாட்டுணை
 பூண்டதோர் காதலிற் போற்றப் பெற்றிலேன்
 மாண்டதோர் வல்வினை வயத்தி னென்பவே.

(கு - ரை.) வேண்டுவார் வேண்டுவது - அன்பராயினார் விரும்பியதை விரும்பியவாறே. மெய்ம்மைசால் - அழிவில்லாத உண்மைப் பொருளாக அமைந்த. ஆண்டகை - ஆண்மைக்கு எல்லையாக விளங்குவோன். தாட்டுணை - தாள் துணை, இரண்டு திருவடிகளையும். பூண்டது ஓர் காதலின் - ஒப்புயர்வில்லாத பேரன்போடு. மாண்டது - இறப்பினையும், பிறப்பினையும் கொடுக்க வல்லதாகிய ஓர் வல்வினை வயத்தின் - ஒப்பற்ற கொடிய தீவினை வயப்பட்டு.

வேண்டுவது அருளும் ஆண்டகை அண்ணல் தாட்டுணை காதலிற் போற்ற வல்வினை வயத்திற் பெற்றிலேன் எனக் கூட்டிப் பொருள் காண்க.

(41)

 என்பவந் துமிப்பதற் கிறைவன் வானுருத்
 தன்பெருங் கருணையாற் றரித்துக் காவியந்
 தென்பெருங் குன்றகஞ் சிவணிற் றென்கிலேன்
 புன்புலைக் குரம்பையே போற்றல் சென்றதே.

(கு - ரை.) பவம் - பிறப்பு. துமிப்பதற்கு - அழித்தருளுதற்கு. இறைவன் - முருகன். வான் உரு - பெருமை மிக்க உருவம். தரித்து - தாங்கி. சிவணிற்று - பொருந்தியது. புலைக் குரம்பை - ஊனுடம்பு. போற்றல் சென்றது - போற்றுதலால் வறிதே வாணாள் கழிந்து போகின்றது.

இறைவன் வானுருத் தரித்து குன்றகம் சிவணிற்று என் பவம் துமிப்பதற்கு என்கிலேன்; புலைக்குரம்பையே போற்றல் சென்றது எனக் கூட்டிப் பொருள் கொள்க.

(42)

 சென்றனந் தணிகையான் திருமுற் சேறலும்
 நின்றன மானந்த நிலையில் வேறற
 வென்றன மடியரோ டிருப்ப நேர்கிலா
 அன்றிய வுலகெலா மாட்டு நெஞ்சமே.

(கு - ரை.) சேறலும் - செல்லுதலும். வேறு அற - வேற்றுமை யின்றி. நேர்கிலா - உடன்படாத. அன்றிய - வீடுபேற்றுக்குத் தடையாக வுள்ள. உலகு எலாம் - உலகம் முழுவதும். ஆட்டு - திரியுமாறு ஆட்டுவித்த.

தணிகையான் திருமுன் சென்றனம்; சேறலும் வேறு அற ஆனந்தநிலையில் நின்றனம்; அடியரோடு இருப்ப நேர்கிலா உலகு எலாம் ஆட்டு நெஞ்சம் வென்றனம் என்க.

(43)