பக்கம் எண் :

150தணிகைப் புராணம்

(வி - ம்.) காட்டிய - காட்ட வென்க. பெண்கள் முல்லைக் கொடியை வளர்த்தல் "மாதரன்பொடு வளர்த்தமுல்லை, மெல்லரும் பின்றதென்னா" எனும் நைடதச் செய்யுளானும், "நல்லவர் கற்பை யழித்து நடந்து" எனும் காஞ்சிப்புராணச் செய்யுளானு முணர்க. கற்புக் கூந்தலார் காவியஞ் செவியினர் என்பன தெரிநிலைப் பொருளுணர்த்தும் வினையெச்ச வினைக்குறிப்பு முற்றாதலின் முல்லை மலரைச் சூடி நீலமலரை யணிந்தெனச் செய்தெனெச்சப் பொருளையுணர்த்தி நின்றன. இங்ஙனம் வினையெச்ச வினைக்குறிப்பு முற்று செய்தெ னெச்சப் பொருளுணர்த்தலை ஆசிரியர் நச்சினார்க்கினியர் "தொல் - சொல்" முன்னத்தினுணரும் கிளவியு முளவே, யின்ன வென்னும் சொன்முறை யான" என்னும் 459 - ஆம் சூத்திர வுரையில் "கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன், குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன், தகர மஞ்ஞையன் புகரில் சேவலங், கொடிய னெடியன் தொடியணி தோளன், நரம்பார்த்தன்ன இன்குரற் றொகுதியொடு, குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல், மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன், முழவுறழ் தடக்கையி னியல வேந்தி, மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து, குன்றுதோ றாடலும் நின்றதன் பண்பே" என்புழிவந்த வினையெச்ச வினைக்குறிப்பு முற்றுக்கள் ஆக்கம் பெற்றுப் பொருளுணர்த்துங்கால், கச்சைக் கட்டிக் கழலையணிந்து கண்ணியைச் சூடிக் குழலையூதி கோட்டைக் குறித்துப் பல்லியங்களை யெழுப்பித் தகரைப் பின்னிட்டு மயிலையேறிக் கொடியை யுயர்த்து வளர்ந்து தோளிலே தொடியை யணிந்து துகிலையுடுத்து ஏந்தித் தழீஇ தலைகொடுத்து ஆடலும் அவற்கு நிலைநின்ற பண்பு "எனச் செய்தெ னெச்சப் பொருளை யுணர்த்தி நின்றவாறு காண்க" என நச்சினார்க்கினியர் கூறியிருத்தலா னறிக.

துணையின்றித் தனியாக இருந்தகாலத் தற்றம்பார்த்துத் தங்களை வேறல் செய்த பகைவரைத் துணைவாய்க்கப் பெற்றகாலத்து வேறல் செய்து அவர்பாலுள்ள ஆயுத முதலியவற்றைக் கோடல்முறை யாகலின்; இப்பெண்களும் துணைவரில்லாக் காலத்து அவனை வென்று முல்லையும் நீலமுமாகிய இப்பாணங்களை எங்கள் பக்கம் ஏவற்க வெனக் கூறிப் பறித்துள்ளாரை யொத்தா ரென்க. இயல்பாக அணியும் முல்லையையும் நீலத்தையும் அவனை வென்று பறித்தலாகக் கருதலால் தற்குறிப்பேற்ற அணியென்க. கலப்போர் ஒவ்வொருவரும் என்பக்க மேவலையெனத் தனித்தனி கூறலால் என்னென்னு மொருமை தனித்தனி சென்று கலப்போ ரென்னும் பன்மையோடு கூடுதலின் வழுவன்று. "ஆசிரியர் நச்சினார்க்கினியர் தொல் - சொல் - எச்சவியலில்", "ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி - பன்மைக் காகு மிடனுமா ருண்டே" எனும் சூத்திர வுரையில் "அஃதை தந்தை யண்ணல் யானை யடுபோர்ச் சோழர்" என்புழிச் சோழரெல்லாம் அஃதைக்குத் தந்தையரா முறையராய் நிற்றலின் தந்தையென்னு மொருமை சோழரென்னும் பன்மையோடு தனித்தனி சென்று கூடுதலின் வழுவின் றென்றதனானு மிதனையறிக. எல்பக்கமெனப் பிரிப்பாருமுளர்: என்பக்கம் எற்பக்கு என விகாரமாயிற்று.

(123)

 எண்ணி லண்டத்துப் பிரமரு மொருநக ரிதுபோற்
 பண்ண வன்னமாய்க் கரந்துபார்ப் பப்புகுந் தாங்குச்
 செண்ண வஞ்சிலம் பரற்றிய தீங்குரல் கவர்வான்
 வண்ண வன்னங்கள் புகப்படுங் கலவிசெய் மாடம்.