பக்கம் எண் :

திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி்1501

(கு - ரை.) மேதகு - மேன்மை பொருந்திய. களிப்பு - இன்பம். ஒரீஇ - நீக்கி. ஞானமே துளையுமாறு - ஞானத்திலேயே திளைக்குமாறு.

கருணையாளனே, செல்வமும் செருக்கும் கல்வியும் களிப்பும் ஒரீஇ ஞானமே துளையுமாறு அருள் என்க.

(47)

 ஆளெனப் படுபவ ரரியய ராதியோர்
 கேளெனப் படுவன கிளர்க ணங்களே
 வேளெனப் பெயரிய தணிகை வித்தகன்
 தாளிணைப் போதுளந் ததைந்த வன்பர்க்கே.

(கு - ரை.) பெயரிய - பெயரையுடைய. வித்தகன் - ஞான முதல்வன். தாள் இணைப்போது - போது இணைத்தாள் - மலர் போன்ற இரண்டு திருவடிகளும். ததைந்த - பொருந்திய.

தணிகை வித்தகன் தாள்இணை உளம் ததைந்த அன்பர்க்கு ஆள் எனப்படுபவர் அரி அயன் ஆதியோர் : கேள் எனப்படுவன சிவகணங்களே என்க.

(48)

 அன்பகந் ததும்பிமெய் யறிவு மீக்கொளீஇத்
 தன்புணர்த் தாண்மலர் தாழ்நர்க் கல்லது
 கொன்பெருந் தணிகையெங் கொற்ற வேலவன்
 மன்பெரும் பவத்துயர் மாற்று கிற்கலான்.

(கு - ரை.) அகம் - உள்ளம். ததும்பி - நிறைந்து. அறிவு மீக்கொளீஇ - அறிவு முதிர்ந்து. தாழ்நர் - வணங்குவோர். கொன் பெருந்தணிகை - மிக்க பெருமை வாய்ந்த தணிகை. பவத்துயர் - பிறவிப்பிணி.

கொற்ற வேலவன் அன்புததும்பி அறிவு மீக்கொளீஇத்தாள் தாழ்நர்க்கு அல்லது பவத்துயர் மாற்றுகிற்கலான் என்க.

 "தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
           மனக்கவலை மாற்றல் அரிது." - குறள்.

(49)

 கலாபமா மயில்கடாய்க் கணத்தி லெங்கணும்
 உலாவிமீண் டமர்தரும் தணிகை யுத்தமன்
 நிலாவுத னசைவறு நிலைமை தோற்றலும்
 சுலாவுமென் மனமுமச் சுழற்சி யற்றதே.

(கு - ரை.) கலாபம் - தோகை. கடாய் - செலுத்தி. நிலாவு - பொருந்திய. சுலாவும் - சுழலுகின்ற.

மயில் கடாய் எங்கணும் உலாவி மீண்டு அமர்தரும் தணிகை உத்தமன் தன் அசைவறு நிலைமை தோற்றலும் என்மனமும் சுழற்சி அற்றது என்க.

(50)