பக்கம் எண் :

1502தணிகைப் புராணம்

வேறு

 அற்ற கேள்விய ரிணக்கமுங் கேள்வியி
           லான்றவ ரிடைத்தீர்வும்
 பெற்றி லாவகை யருள்வையே லஃதுய்யும்
           பேறெனத் தரிப்பேனாற்
 கற்ற வேதியர் வேள்வியஞ் சாலையுங்
           கழகமு மிடந்தோறும்
 துற்ற காவியம் பொருப்பில்வீற் றிருந்தருள்
           சுந்தரப் பெருமானே.

(கு - ரை.) அற்ற கேள்வியர் இணக்கமும் - உன்னுடைய புகழைக் கேட்டறியாதவர்களின் தொடர்பும், கேள்வியில் ஆன்றவரிடைத் தீர்வும் - புகழை இடைவிடாது கேட்டு இன்புறும் அன்பர்களின் பிரிவும். பெற்றிலா வகை - எளியேன் அடையாதவாறு. உய்யும்பேறு - பிறவிப் பிணியின் நீங்கி வீடுபேற்றினை யுறுதற்கு வாய்த்த தவப்பயன். துற்ற - நெருங்க. சுந்தரப் பெருமான் - அழகினுக்கு இறைவன், பேரழகுடையவன்.

வேள்வியஞ் சாலையும் கழகமும் இடந்தோறும் துற்ற காவியம் பொருப்பில் வீற்றிருந்தருள் பெருமாளே இணக்கமும், தீர்வும் பெற்றிலாவகை அருள்வையேல் அஃது உய்யும்பேறு எனத் தரிப்பேன் என மாற்றிக் கூட்டிப் பொருள் காண்க.

(51)

 மானை வென்றிரு நோக்கமும் பயின்றொளிர்
           வாள்விழிப் படையேந்தும்
 தானை வென்றெழு மூக்கமற் றியாதெனச்
           சழங்கலை மடநெஞ்சே
 ஊனை வென்றமெய்ம் மாதவர் குழாந்தொழு
           முற்பல வரையாளும்
 தேனை வென்றசொல் வள்ளிநா யகனிரு
           சேவடித் தலஞ்சேரே.

(கு - ரை.) இருநோக்கம் - ஒன்று நோய் செய்யும் நோக்கு, மற்றொன்று அந்நோயைப் போக்கும் நோக்கு. இருநோக்கமும் பயின்று வாள்விழிப்படை ஏந்தும் தானை - இளமடந்தையர் கூட்டம். எழும் ஊக்கம் - எழுதற்கு உரிய செயல். சழங்கலை - சோர்வு அடையாதே. ஊனை வென்ற - தம் உடம்பின்மீது உள்ள பற்றினையும் விட்ட. உற்பலம் - கருங்குவளை.

வென்று இருநோக்கமும் பயின்று வாள் விழிப்படை ஏந்தும் தானை வென்று எழும் ஊக்கம் யாது எனச் சழங்கலை நெஞ்சே, மாதவர் குழாம் தொழும் உற்பல வரையாளும் வள்ளி நாயகன் இருசேவடியும் சேர் என முடித்துப் பொருள் கொள்க.

(52)