பக்கம் எண் :

திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி்1503

 சேர்ந்து வார்ந்தன குறங்கரி பரந்தன
           சேல்விழி மலைவென்ற
 ஏர்ந்த பூண்முலை யெனமட வியர்நல
           னெண்ணிநைந் தழிநெஞ்சே
 ஆர்ந்த பேரருள் கொழிப்பன விழியிரு
           ளனுக்குவ துருவேட்ட
 தோர்ந்து வீசுவ கரமெனத் தணிகையா
           னுயர்நல னினைந்துய்யாய்.

(கு - ரை.) குறங்கு - துடை. சேல் - கெண்டைமீன். மடவியர் - மகளிர். நலன் - அழகு. கொழிப்பன - சொரிவன. அனுக்குவது - அழிப்பது. வேட்டது - விரும்பியது.

குறங்கு சேர்ந்து வார்ந்தன, சேல்விழி அரி பரந்தன, ஏர்ந்த பூண்முலை மலை வென்ற என மடவியர் நலன் எண்ணி நைந்து அழி நெஞ்சே, விழி ஆர்ந்த பேரருள் கொழிப்பன, உரு இருள் அனுக்குவது, கரம் வேட்டது ஓர்ந்து வீசுவ எனத் தணிகையான் உயர் நலன் நினைந்து உய்யாய் எனக் கூட்டிப் பொருள்
கொள்க.

(53)

 ஆய்ந்த நுண்ணிடை யலைதொறு நிறையெலா
           மலைந்தனை யணங்கன்னார்
 வாய்ந்த வாள்விழி பிறழ்தொறு நூன்முறை
           வரம்பெலாம் பிறழ்ந்தாயாற்
 சாய்ந்த நெஞ்சமே தடங்கட றடிந்திரு
           டதையவிண் ணிவர்மேகம்
 தோய்ந்த காவிவெற் பிறையவ னருட்கட
           றோய்வதெங் ஙனமந்தோ.

(கு - ரை.) ஆய்ந்த - அழகிய, அலைதொறும் - அசையும் தோறும். நிறை எலாம் மலைந்தனை - மனவுறுதி குன்றி மயங்குகின்றாய். வாள்விழி பிறழ்தொறும் - வாள்போன்ற கண்கள் பிறழுந்தொறும், நூல் முறை வரம்பெலாம் பிறழ்ந்தாய் - அற நூல்கள் கூறும் நெறிகளைக் கடந்து ஒழுகுகின்றாய். தடிந்து - குறைத்து. இருள் ததைய - இருள் நிறைய. அருட்கடல் தோய்வது - அருளாகிய கடலில் குளிப்பது.

அணங்கு அன்னார் நுண்ணிடை அலைதொறும் நிறையெலாம் மலைந்தனை, வாள் விழி பிறழ்தொறும் நூல்முறை வரம்பெலாம் பிறழ்ந்தாய் நெஞ்சமே, மேகம் தோய்ந்த காவிவெற் பிறையவன் அருட்கடல் தோய்வது எங்ஙனம்? 'இலகுந் துடிநே ரிடையார் விழிகூ ரலகம் பெனவே யறியா தழிகோ' என அருணகிரிநாதர் இரங்கிக் கூறியதுங் காண்க.

(54)