பக்கம் எண் :

1510தணிகைப் புராணம்

(கு - ரை.) மாதர் - அழகு. மணிவடம் - முத்துவடம். மடநல்லார் - இளமை பொருந்திய மகளிர். காதல் நனிகூர்ந்தவரின் - கழிபெருங் காதல் கொண்டவர் போல். காதல்எல்லாம் - அன்பு முழுவதும். பாவனை வல்லார் - அகவழிபாடு செய்தலில் தேர்ச்சி பெற்றோர்.

மடநல்லார் தம் காதல் நனி கூர்ந்தவரின் காதல் எலாம் கடவுட் பாதமலர் தனிலிருத்தும் பாவனை வல்லார் அறிவோடு உருத்திரிந்து போகம் துய்ப்பார் என இணைத்துப் பொருள் கொள்க.

(68)

 பாரார விழுந்துபுரண் டெழுந்துபல
           முறையேத்திப் பண்பு கூர
 ஆராத பெருங்காத லகத்தரும்ப
           முகத்துவிழி யரும்பித் தேக்கும்
 நீரார வுயர்தணிகை நிமலனருட்
           கடறிளைக்கு நீரார் மீண்டு
 வாரார்கள் வந்தாலுங் கடலெதிர்ந்த
           நதிபோல வயக்க மாறார்.

(கு - ரை.) ஆராத - தெவிட்டாத. அகத்து அரும்ப - உள்ளத்தில் தோன்ற. அருட்கடல் திளைக்கும் - அருளாகிய கடலில் படிந்து இன்புறும். நீரார் - இயல்பினையுடையவர்கள். வாரார் - பிறவார். வயக்கம் - ஒளி.

ஆரவிழுந்து புரண்டு எழுந்து ஏத்தி கூர அரும்ப அரும்பித் தேக்கும் நீர் ஆர நிமலன் அருட்கடல் திளைக்கும் நீரார் மீண்டு வாரார், வந்தாலும் வயக்கம் மாறார் என முடித்துப் பொருள் கொள்க.

முருகன் அருளைப் பெற்றோர் மீட்டும் பிறவார் என்பது கருத்து.

(69)

 மாறாத சிவஞானப் பேறழிக்கும்
           வலியனைத்தும் வாவித் தாக்கிப்
 பாறாத வினைவலியு முப்பாழுக்
           கப்பாலாம் பாழி னின்று
 வேறாக வொருவுமவர் தாமன்றே
           யுலகமெலாம் விரியத் தோற்றும்
 ஆறாறுங் கடந்ததிருத் தணிகைவரை
           யாற்குரிய வடிமை யாவார்.

(கு - ரை.) சிவஞானப்பேறு - சிவஞானத்தால் அடைதற்குரிய பேறு, வீடுபேறு. அழிக்கும் - மறைக்கும். வலியனைத்தும் - மும்மலங்களின் (ஆணவம், கன்மம், மாயைகளின்) வலிமுழுவதும். முப்பாழ் - காம வெகுளி மயக்கங்கள். அப்பாலாம் பாழ் - மாயை. ஆறாறும் - முப்பத்தாறு தத்துவங்களும்.