பக்கம் எண் :

திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி்1511

சிவஞானப் பேறு அழிக்கும் அனைத்தும் வாவித்தாக்கி வினைவலியும் பாழில் நின்றும் ஒருவுமவர் தணிகை வரையாற்கு உரிய அடிமையாவார் என முடித்துப் பொருள் கொள்க.

(70)

வேறு

 ஆவா வடியேற் குறுமே யவலம்
 தாவா வினைதாக் குமருட் டணிகை
 மூவா முதலா தமுழுப் பொருடன்
 பூவா ரடிசேர் தருபுண் ணியமே.

(கு - ரை.) ஆவா : இரக்கக் குறிப்பு. அவலம் - துன்பம். தாவா - நீங்காத. தாக்கும் - அழிக்கும். மூவா முதலாத முழுப்பொருள் - மூத்து இறத்தலும், பிறத்தலும் இல்லாத முழுமுதற் கடவுள். பூ ஆர் அடி - தாமரை மலர் போன்ற திருவடி.

அவலம் தாவா வினைதாக்கும் தணிகை முழுப்பொருள் தன் அடி சேர்தரு புண்ணியம் ஆவா அடியேற்கு உறுமே எனக் கூட்டிப்
பொருள் கொள்க.

(71)

 மேலா கியதே வர்விழுப் பதமும்
 சாலா விமையோர் பதமுந் தவிர
 மாலா மதிநல் கும்வரைத் தணிகைக்
 காலா யுதநீள் கொடியான் கழலே.

(கு - ரை.) மேலாகிய தேவர் - நான்முகன், திருமால் முதலியோர். சாலா இமையோர் - முப்பத்து மூவர். மாலாமதி - மெய்யுணர்வு. காலாயுதம் - கோழி. கழல் - திருவடி.

பதமும் பதமும் தவிரக் காலாயுத நீள்கொடியான் கழல் மாலாமதி நல்கும் என இணைத்துப் பொருள் கொள்க.

முப்பத்து மூவராவார் : வசுக்கள் எண்மர், உருத்திரர் பதினொருவர், ஆதித்தர் பன்னிருவர், மருத்துவர் இருவர்.

(72)

 கழலுங் கழலா விருகைக் குருகு
 தழலுந் தழலா மதியந் தணிகை
 அழலும் மழல்போ லவிர்வாற் பெறுமா
 சுழலுஞ் சுழலா வெனுளத் துணையே.

(கு - ரை.) குருகு - வளையல். மதியம் - சந்திரன். அவிர்வான் - விளங்கும் முருகன். சுழலும் - கலங்கும்.