பக்கம் எண் :

1512தணிகைப் புராணம்

கழலாக் குருகு கழலும்; தழலா மதியம் தழலும்; அவிர்வாற் பெறுமா சுழலா என் உளத்துணை சுழலும் என்க.

(73)

 துணையா யுயிர்தோ றும்விராய்த் தணிகை
 இணைவார் கழலேத் தவிருந் தெமைவந்
 தணைவா னவனா ரருளன் றியுநாம்
 பிணைமா மதியே பெறுமா ருளதே.

(கு - ரை.) விராய் - கலந்து. இணை - இரண்டு. அணைவான் - அடைவான். பிணை - விரும்பும் பொருள்.

உயிர்தோறும் விராய்க் கழல் ஏத்தத் தணிகை இருந்து எமை வந்து அணைவான் அவன் அருளன்றியும் மதியே நாம் பெறுமாறு உளதே என்க.

அவனை வணங்குதற்கும் அவனருள் வேண்டும் என்பது கருத்து.

(74)

 தேதே யெனவண் டிசைசெய் யநறும்
 போதேய் பொழில்சூழ் தணிகைப் புனித
 னேதா விடமா வெனைமுற் றியெனக்
 காதா ரமதா யின்பளித் தனனே.

(கு - ரை.) தேதே : ஒலிக் குறிப்பு. போது - மலர். ஏய் - பொருந்திய. தணிகைப் புனிதன் : முருகன்.

வண்டு இசை செய்யப் போது ஏய் பொழில் சூழ் தணிகைப் புனிதன் எனைமுற்றி இன்பு அளித்தனன் என்க.

(75)

 அளித்தான் றனையார்த் தியெனுள் ளமெலாங்
 குளித்தேன் குறியற் றவன்கூர் நிறைவின்
 ஒளித்தா னவனும் மிரண்டொன் றறவே
 துளித்தாழ் மழைசூழ் தணிகைப் பரனே.

(கு - ரை.) அளித்தான்தனை - இன்பம் அளித்தருளிய முருகனை. ஆர்த்தி என் உள்ளம் எலாம் குளித்தேன் - என் உள்ளம் முழுவதும் அவன் திருவுருவிற் பொருத்திப் பேரின்ப வாரியிற் படிந்தேன். அவனும் இரண்டு ஒன்று அற - அம் முருகனும் இரண்டென்றும் ஒன்றென்றும் சொல்லுதற்கு இயலாதவாறு. குறியற்ற அவன் கூர்நிறைவின் ஒளித்தான் - உருவம் அற்ற தன் மிக்க நிறைவினுள் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு தானாகவே நின்றான்.

அளித்தான்தனை ஆர்த்திக் குளித்தேன் ; தணிகைப்பரன் அவனும் குறியற்ற கூர் நிறைவின் இரண்டு ஒன்று அற ஒளித்தான் என இணைத்துப் பொருள் கொள்க.

(76)