பக்கம் எண் :

திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி்1513

 பரமென் றிமையோர் பணியுந் தணிகை
 வரனன் முதலென் றுமறைத் தொடரான்
 உரனன் குகொளுத் தினுமுள் குவரோ
 விரவும் பழவல் வினைவீ யலரே.

(கு - ரை.) பரம் - கடவுள். இமையோர் - தேவர். வரன் - தலைவன், உரன் - அறிவு. உள்குவரோ - நினைப்பார்களோ? பழவல்வினை வீயலர் - பழமையான கொடிய வினையழியப் பெறாதவர்கள்.

இமையோர் பணியும் தணிகை வரன் நல் முதல் என்று மறைத்தொடரான் உரன் நன்கு கொளுத்தினும் வல்வினை வீயலர் உள்குவரோ என இணைத்துப் பொருள் கொள்க.

(77)

 அலரோ னரியா தியர்தம் மையெலாம்
 பலநாண் முறையாற் பணியும் பலனன்
 பிலரா யொருகா லெழிலார் தணிகைப்
 புலவோற் பணியும் பலன்போ லருண்மோ.

(கு - ரை.) அலரோன் - நான்முகன். அரி - திருமால். முறையால் - முறைப்படி. பலன் - பயன். ஒருகால் - ஒரு முறை. தணிகைப்புலவோன் - முருகன். அருண்மோ - அருளுமோ.

அலரோன் ஆதியர் தம்மைப் பலநாள் பணியும் பலன் அன்பு இலராய் ஒருகால் தணிகைப் புலவோற் பணியும் பலன் போலருண்மோ என்க.

(78)

 மோகத் தழுந்து முகுந்தன் முதலா
 நாகத் தவர்நல் குவரந் தணிகை
 ஏகத் தொருவள் ளலிரங் கிவிராய்ப்
 பாகத் தளவிற் பகிருங் கொடையே.

(கு - ரை.) மோகம் - ஆசை, காமம். முகுந்தன் - திருமால். நாகத்தவர் - விண்ணுலகத்தவர், தேவர். ஏகத்து ஒரு வள்ளல் - தனிமுதலாயுள்ள முருகன். பாகத்தளவில் - அன்பர்களின் பக்குவத்திற்கு ஏற்ப. பகிரும் - பகிர்ந்து நல்கும்.

தணிகை வள்ளல் இரங்கி விராய்ப் பாகத்து அளவில் பகிரும் கொடை மோகத்து அழுந்தும் முகுந்தன் முதலாம் நாகத்தவர் நல்குவர்? என மாற்றிக் கூட்டிப் பொருள் கொள்க.

முருகன் போன்று நல்க முகுந்தனாலும் முடியாது என்பது கருத்து.

(79)

 கொடையா துமிலார் கடமைக் குறையுற்
 றுடையா யெனவேத் தியுயங் குறுவீர்
 கொடையா லுயருந் தணிகைக் குருவை
 உடையா யெனவண் மினிருய் யுமினே.