பக்கம் எண் :

152தணிகைப் புராணம்

 மழலை மென்மொழி மாதரார் பண்ணையின் மருவி
 விழவு மல்கியாட் டயர்வரால் விளங்கர மகளிர்.

(இ - ள்.) (அந்நகரத்து) மேன்மாடங்களிலுள்ள கல்விச் சங்கங்களில் மத்தளங்களை வென்ற தோளினையுடைய அந்நகரத் தாடவர்களோடு தேவருலகத்துள்ள தேவர்கள் கலந்து பலகலைகளையுமாராய்வார்கள். ஆண்டுள்ள மழலைச் சொற்களையுடைய பெண்கள் விளையாடுமிடங்களிற் பொருந்தி அழகு விளங்குகின்ற தேவமகளிர் சிறப்பை நிறைவித்து விளையாடுதலைச் செய்வர்.

(வி - ம்.) முழவு - மத்தளம். முகம் - ஏழாவதனுருபு. கழகம் - சபை. மழலை - பொருள் விளங்காச்சொல். "ஒருகுதலைச் சின்மழலைக் கென்னோ வையவோதுவதே" என்னும் திருக்கோவையார் (104) கவியுரையானுணர்க. பண்ணை - விளையாடுமிடம். விழவு - சிறப்பு. விழவு மல்கி - தாங்கள் விளையாடுமிடத்திற்குச் சிறப்பை நிறைவித்தென்க.

(127)

 பொறித்த சீரெழுத் தொழுக்கெனப் பொற்றமா டங்கள்
 செறித்த வார்நிரை வீதியிற் சிலவள மொழிந்தாம்
 வெறுத்த வீதிதற் சூழ்தர வெற்றிவே லிறைவன்
 குறித்த கோயில்கொண் டோங்கிய குன்றினி மொழிவாம்.

(இ - ள்.) எழுதிய சிறப்புப் பொருந்திய எழுத்துக்களின் வரிசை யென்று சொல்லும்வண்ணம் பொலிவுபெற்ற இல்லங்கள் நெருங்கி ஒழுங்காக நிறைந்த வீதியின்கண்ணுள்ள சில வளங்களைமட்டும் கூறினாம். நெருங்கிய வீதிகள் தன்னைச்சூழ வெற்றியோடு கூடிய வேற்படையையுடைய முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கக் கருதிய கோவிலைத் தன்னிடத்தே கொண்ட தணிகைமலையின் சிறப்பை யினிச் சொல்வாம்.

(வி - ம்.) பொறித்தல் - எழுதுதல். ஒழுக்கென - வரிசையென்று சொல்லும்படி. பொற்ற - பொலிவுபெற்ற. செறித்து - நெருங்கி. வார் - ஒழுங்கு. வெறுத்த - செறிந்த. குறித்த - இருக்கக் கருதிய.

(128)

வேறு

 நீல வுடைதண் கிடங்காக நீவி யிறுக்கு மரைப்பட்டம்
 கோல மதிலா மாடநிரை குளிர்பூந் தொடையா விடைக்குவடு
 வால முலையா நெடுந்தூவி மணிப்பொன் மோலி முடிசூடிச்
 சீலநகர மகளிருந்து செங்கோல் செலுத்துஞ் செவ்வித்தே.

(இ - ள்.) ஒழுக்கத்தோடு கூடிய (முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற) திருக்கோவிலாகிய பெண் நீலநிறம் பொருந்திய வாடை குளிர்ச்சி பொருந்திய அகழியாகவும், கொய்சகத்தையிறுக்கும் ஒட்டி யாணமானது குற்றமில்லாத மதிலாகவும். இவ்வரிசைகள் குளிர்ச்சி பொருந்திய பூமாலையாகவும் (அம்மலையின்) இடையேயுள்ள சிகரங்கள்