| (கு - ரை.) அருள் ஆழி - அருட்கடல். ஐந்தொழில் - ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன. தீக்கை - உயிரைத் தூயதாக்குதல். தணிகைவரை அறக்கடவுள் உருவாகி அருளானேல் மறையும், மறையொழுக்கும், ஐந்தொழிலும், தீக்கையும், மற்றெவைகளும் அற்று இருளாகி எவ்வுயிரும் இடர்க்கடல் நின்று ஏறா என்க. (93) | | ஏறாம லென்வினையைப் பயனாக வினிதேற்று | | | மாறாம லெனைமாற்றி மாறாத தன்னியல்பிற் | | | பேறாக வைத்தருளுந் தணிகைவரைப் பெருமானைக் | | | கூறாத வாக்கினரே கூறாத வாக்கினரே. |
(கு - ரை.) மாறாமல் எனை மாற்றி - தன்னின் வேறுபடாதவாறு என்னை அறியாமையாகிய இருளினின்றும் நீக்கி. கூறாத வாக்கினர் - வாழ்த்தாத வாக்கினையுடையோர். கூறாத வாக்கினரே - வாய்பேசாத ஊமையரே ஆவர். என் வினையை ஏற்று எனைமாற்றித் தன் இயல்பில் பேறாக வைத்தருளும் பெருமானைக் கூறாத வாக்கினர் கூறாத வாக்கினரே என்க. (94) | | வாக்கினா லதுபடைத்த பயன்பெற்றேன் புகழ்வழுத்தி | | | நோக்கினா லதுபடைத்த பயன்பெற்றே னுருநோக்கி | | | யாக்கையா லதுபடைத்த பயன்பெற்றே னடிவணங்கித் | | | தேக்குசீர்த் தணிகைவரைச் சிவபெருமான் றனையடுத்தே. |
(கு - ரை.) பொருள் வெளிப்படை. தணிகைவரைச் சிவபெருமான் தனை அடுத்துப் புகழ் வழுத்தி வாக்கினா லாய பயன் பெற்றேன்; உருநோக்கி நோக்கினாலாய பயன் பெற்றேன் ; அடிவணங்கி யாக்கையா லாய பயன் பெற்றேன் என்க. வாக்கு நோக்கு யாக்கை இவைகளால் ஆகும் பயன் இறைவனைப் புகழ்வதும், நோக்குவதும், வணங்குவதுமே ஆகும் என்பது குறிப்பு. (95) | | அடுத்தமல வுருவாகி யலைத்தழித்த வுலகமெல்லாம் | | | தொடுத்தவரு ளுருவாகிச் சுகம்பெருக்குந் திறங்கண்டேன் | | | எடுத்தவுடற் பயனேய்க்குந் தணிகைவரை யெம்பெருமான் | | | மடுத்தெனையான் றனைமடுத்து வயங்குநிலை யளித்ததுமே. |
(கு - ரை.) ஏய்க்கும் - இசையச் செய்யும். யான் தனைமடுத்து - "யான்" என்னும் முனைப்பை அடக்கி. வயங்கும் நிலை - தன்னைத் தெளியும் நிலை. |