பக்கம் எண் :

திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி்1521

எம்பெருமான் எனை யான் தனை மடுத்து வயங்கும் நிலை அளித்ததும் மல உருவாகி அலைத்து அழித்த உலகம் எல்லாம் அருளுருவாகிச் சுகம் பெருக்கும் திறங் கண்டேன் என மாற்றிக் கூட்டிப் பொருள் காண்க.

(96)

 அளித்துநிறுத் தமிழ்த்துமறைத் தருளுமுரு வாதியாய்க்
 களித்துநடங் குயின்றவையுங் கடந்தொளிருந் தன்னியல்பைத்
 துளித்தமதுக் காவிவரைச் சூழிளையோன் றன்னருளால்
 தெளித்தலுமற் றவனுருவந் தீப்பிழம்பிற் றொழுதேனே.

(கு - ரை.) அளித்து நிறுத்து அமிழ்த்து மறைத்து அருளும் ஆதி - ஆக்கல் முதலிய ஐந்தொழிலும் செய்தருளும் முதல்வனாய். அவையும் கடந்து - ஐந்தொழில்களையும் கடந்து. தீப்பிழம்பு - ஒளியின் கூட்டம். "தீ" ஆகு பெயர்.

ஆதியாய்க் களித்து நடம் குயின்று கடந்து ஒளிரும் தன் இயல்பை இளையோன் தன் அருளால் தெளித்தலும் அவன் உருவம் தீப்பிழம்பிற் றொழுதேன் என்க.

(97)

 தொழுதேத்தப் படுவதுவுந் தொழுதேத்து விப்பதுவும்
 தொழுதேத்து வதுமற்ற சுகப்பெருக்கி லதீதமாய்த்
 தொழுதேத்தப் படுந்தணிகைத் தோன்றலுரு வாயின்றித்
 தொழுதேத்து மெவ்வுயிர்க்குந் தோன்றாமல் நின்றனனே.

(கு - ரை.) சுகப்பெருக்கு - இன்ப வெள்ளம், பேரின்பம். அதீதம் - கடந்து நிற்பது. எவ்வுயிர்க்கும் - எல்லாவுயிர்களுக்கும்.

ஏத்தப் படுவதும், ஏத்துவிப்பதுவும், ஏத்துவதும் அற்ற சுகப் பெருக்கில் அதீதமாய் ஏத்தப்படும் தோன்றல் உருவாய் இன்றி எவ்வுயிர்க்கும் தோன்றாமல் நின்றனன் என்க.

(98)

 நின்றனவுஞ் சரிப்பனவு நிலையினவு நிலையாவும்
 அன்றியனைத் தினுநிறைந்த வருட்கடலி னினிதாடி
 மன்றல்கமழ் காவிவரை வள்ளலவர் வரிநந்தக்
 குன்றிவர்ந்த தவரன்றே குன்றமென வசைவற்றார்.

(கு - ரை.) நின்றன - நிலையியற் பொருள்கள். சரிப்பன - இயங்கியற் பொருள்கள். நிலையின - உள்ளன. நிலையா - இல்லன. வள்ளலவர் வரி நந்து - முருகனின் வடிவம் ஆகும். அக்குன்று இவர்ந்ததவர் - அக்குன்றில் விரும்பியுறையும் தவமுடையோர். குன்றமென அசைவு அற்றார் - மலைபோன்று துளக்கம் (நடுக்கம்) அற்றவராவர்.

அனைத்தினும் நிறைந்த கடலின் ஆடி வள்ளல் வரி நந்து அக்குன்று இவர்ந்ததவர் அன்றோ குன்றம் என அசைவற்றார் என்க.

தணிகைவரையை அடையாதார் மனக்கவலை நீங்கப் பெறார் என்பது
குறிப்பு.

(99)