| 125 பிணிக்கோட் பட்டுப் பேதுறு மனத்தான் |
| முந்தையோ ரீட்டு முழுநிதிச் செல்வமும் |
| பொய்ம்மை யாளர் புகழெனத் தேய |
| நோய்ப்பகை யாளர்க்கு நொடிந்தென் சிதரிற் |
| பல்வகை மருந்துக்குப் பகர்விலை தொலைச்சி |
| 130 யதுவென வெறுவிய தன்றுமற் றிதுவென |
| முன்னைநாண் மருந்தை முறைமுறை யிகழாப் |
| பின்னைநாண் மருந்தைப் பெட்டுவாய் மடுத்துப் |
| பண்டைநோய் மேலும் பருகுபன் மருந்தான் |
| மண்டுநோய் வேறு மரீஇக் கிளர்ந்துருப்ப |
| 135 வுரைத்தவென் மொழிவழி யொழிகினை யல்லைகொல் |
| பெருத்துநோய் தெறுமென மருத்துவ னொழியத் |
| தெய்வத் திறத்தாற் றீர்வுகாண் பாமென |
| வுள்ளூர் வயின்வயின் றெள்ளிதி னோங்கும் |
| புரிமுறுக் கவிழ்க்கும் பூம்புனற் றீர்த்தமும் |
| 140 பல்வகைத் தெய்வப் பசும்பொற் கோட்டமும் |
| படிந்தும் பணிந்தும் பயன்கா ணாமை |
| யணியயற் புறநகர் மணிகெழு கோட்டமும் |
| விரத நியதிப் பரவு கடனாதிப் |
| பல்வேறு தொழிலொடு படர்ந்துபணிந் தேத்தியுங் |
| 145 கவலை நெஞ்சங் கையறு பினையச் |
| சேட்சென் றொராஅல் செய்தென வலித்து |
| மிக்கநோய்க் கிரங்கு மொக்கல் புறந்தழுவ |
| வறுமைக் கவற்சியு மிறுகுறப் பிணிப்ப |
| வில்லுந் தமரு மிசைபயி னாடு |
| 150 மென்மெலக் கழீஇ விரிகதிர்ப் படையா |
| லிருள் கக்குலாசீ மெழுபரித் தேரோன் |
| கடுஞ்சினந் திருகிய கொடுமைகூ ரமயத்து |
| முளிமுதன் முருக்கிய முழங்கழல் போழ்ந்து |
| வளியுலாய்ப் புறத்தும் வழங்குநர்த் தெறூஉம் |