பக்கம் எண் :

திருத்தணிகையாற்றுப்படை1539

விருத்தியுரை

காப்பு

சீரார்...................................................களிறு

இது கடவுள் வணக்கம்-என்பது இந் நூல் இடையூறின்றி முடிவு கூடற்பொருட்டு நூலாசிரியர் தாமெடுத்துக்கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளாகிய மூத்தபிள்ளையாருக்கு வணக்கஞ்செய்தல்.

நூல் கூறுவார் முதற்கண் மங்கலமொழி வகுத்துக் கூறவேண்டுதலால், மங்கலமும், எழுத்துத்தானமும், கணமும் நன்கியைந்த "சீரார்" என்றும், இந் நூற்பொருட்பயன் ஈண்டுப் பயப்பதாக நிற்றலானும், உலகியல் நடத்தற்கேதுவாகப் பிள்ளையார் வள்ளி நாச்சியாரைக் குறிச்சியின்கண் திருமணம் செய்துகொண்ட கோலத்தொடு அத் திருமலைக்கண் வந்து வீற்றிருந்தமையானும் தொடைபுனைந்த செம்பாவை யென்றும் கூறினர்.

திருத்தணிகையென்னும் அடையடுத்த பெயர்க்குச் சீர் என்னும் மங்கலச்சொல்பாலதானமும், சீரார் என்பது நேர்நேர் ஆகலின் உயிர்க்கணமும், தணிகையென்னும் அடையடுக்காத பெயர்க்கென்னின் குமாரதானமும் இயைந்து நிற்றல் காண்க.

இத் திருமலைக்குச் செருத்தணியென ஒரு பெயருமுள்ளது. அது முன்னர்ச் சூரபன்மன் செய்த போர்த்தொழிலினும், பின்னர் வேடர்கள் செய்த போர்த்தொழிலினும் பிள்ளையார் கொண்டிருந்த வெகுளி தணிந்து வந்து வீற்றிருந்த காரணத்தாலாயது, அதனைக் கந்தபுராணம் வள்ளியம்மை திருமணப்படலத்தில்,

 'செங்கண் வெய்யசூர்ச் செருத்தொழி லினுஞ்சிலை வேடர்
  தங்க ளிற்செயுஞ் செருத்தொழி லினுந்தணிந் திட்டே
  யிங்கு வந்தியா மிருத்தலாற் செருத்தணி யென்றோர்
  மங்க லந்தரு பெயரினைப் பெற்றதிவ் வரையே'

என்னுஞ் செய்யுளிற் காண்க.

(இதன்பொருள்.) ஐங்கைக் களிறு-ஐந்து கைகளையுடைய யானை, முன்புபோல் - முன்னை நாளில் புணர்த்தினவாறு போல, வேற்றுருவங் கொள்ளாமை - இற்றை நாளில் வேற்றுருவங் கொள்ளாமல், ஏரார் தணிகை இளவற்கு - ஏற்றமமைந்த திருத்தணிகைக்கண் இளையபிள்ளையார்க்கு,