| முதலிய பொருள்களைப் பயப்பதாதலானும், அத்தேரும் வழங்குதற்கமையா வண்மையினென்றும், அத்தேர் இறைவன் திருவடியிடலும் நிலைகுலைந்து வாளாப்போந்ததாதலானும், கற்றுவல்ல புலவரது புலமையை இதுபோலச் சீர்தூக்கவல்ல மிக்க கடவுட்டன்மை உடையது அன்று; ஆதலானும், அதனினுமிப்பலகையிடத்தே மிக்க விருப்பினராய் வீற்றிருந்தமை தோன்றத் தண்டா விருப்பி னென்றுங் கூறினர். வேண்டுதல் வேண்டாமையிலானுக்கும் அப் பலகைக்கண் வீற்றிருக்குமதோர் விருப்பந் தோன்றிற்றாலோ வெனின், அது தூய்மையு மந்திர வலிமையுமுடைத்தாதலானும், இறைவன்தானே நல்க நின்றதாதலானும், அப் பலகைக்கண் வடமொழியில் உள்ள முதலெழுத் தைம்பத்தொன்றுள் ஆகார முதலிய நாற்பத்தெட்டெழுத்துக்களாகிய நாற்பத்தெண் புலவரோடு தலைமையும் வேறுபடாத இயற்கை ஒலியும் ஏனைய எழுத்துக்களனைத்தையுமியக்கும் ஆற்றலுமுள்ள அகரத்திற்கு முதல்வனாகிய விறைவன் நெடிது வீற்றிருந்தது தனது திருவருளானாகலான் அவ்வருளையே விருப்பென வுபசரித்தார். (12 - 15) மாயிருந் தமிழ்க்கடல் வடமொழிக்கடலென்று ஆயிரு கடலும் ஆற்றலின் கடையா ஐயம் திரிபு என்னும் அழல்விடம் படாது வெய்ய செம்பொருளெனும் மிளிர்தீஞ் சுதைத்திரள் - மிகப்பெரிய தமிழ்மொழியாகிய கடலும் வடமொழியாகிய கடலுமெனச் சான்றோரா லாராயப்படுகின்ற இருவகைக் கடல்களையும் அறிவாகிய மத்தினாற் கடைந்து (இது ஏகதேசவுருவகம்) ஐயமுந்திரிபுமான அழல்கின்ற நஞ்சமெழாமே மிக்க செவ்விய பொருளென்னும் தூய்மைத்தான வினிய அமிர்த புஞ்சத்தையும், (இவையுருவகம்), கடைந்தென்னு மெச்சம் ஆராது என மேல்வரும் முதனிலைத் தொழிற்பெயர் கொண்டது. ஓர் உருவை இருளிடையே கண்டு குற்றியோ மகனோ வெனத் துணிவுகொள்ளாமை ஐயம், ஒன்றனை மற்றொன்றாகவே துணிதல் திரிபு. (16) ஆராக் காதலின் ஆராது கைப்பவும் - அடங்காத விருப்பத்துடனே அவற்றை நுகரவறியாமையால் வெறுக்கவும், சுதையென்றதற் கேற்பக் கைப்பவென்றார். ஆரா என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். இன் : உருபுமயக்கம். உம்மை எதிரது தழீஇய எச்சவும்மை. தாயக்குரிசிலது தேராகிய நிலனும் வழங்குதற்கமையா வண்மையுடைமையால், புலவருள்ளத்தினையொத்த சங்கப்பலகையினிடத்தே அவ்வெண்டோண் முதல்வனோடு பயிலிய அருமறைக் கேள்வியும் தீஞ்சுதைத் திரளும் ஆராது கைப்பவுமென முடிக்க. ஊன்று விரல் என்பது முதல் கழலவும் என்னு மளவும் ஒரு முடிபு. (17 - 20) ஊன்று விரல் அழுந்தாது உடல் தசைதிணிந்து கான்ற தேம் தெரியல் கருங்குழல் மகளிர்க்கு அணங்குளம் நிறீஇ ஆருயிர் கவர்க்கும் வளங்கவின் கொழிக்கும். |