| பல்படையும் வழாது கைக்கொண்டு - விளங்குகின்ற வேல் முதலிய ஆயுதங்கள் வழங்கப்படுகின்ற போர்க்களத்திடத்தே சினந்தெதிர்ந்து போர்புரிந்து வென்று (ஒன்னாரது) முழங்காநின்றவார் கட்டிய முரசங்களையும், மதச்செருக்கால் ஆரவாரிக்கா நின்ற பெரிய யானைக்கூட்டங்களையும், அவரது ஆட்சியில் வைக்கப்பட்டிருந்த பலவாகிய மற்றைப் படைத் திரள்களையும் அறைபோதரா வண்ணம் வயப்படுத்திக் கொள்ளுதலால், பல்படை என்றது இரதம், பரி, கரி, காலாள் முதலியவற்றை கொள்ள என்பது கொண்டெனத் திரிந்து நின்றது. (35 - 36) பராபவத் தெவ்வர் வரிசையின் இறுக்கும் திறைகே "ரிமை முறைநேர் நடாவியும் - தோல்வியடைந்த பகைமன்னர்கள் அணியணியாக வந்து செலுத்தும் திறையினைப் பெறுதற்குரிய பேரரசினைச் சிறப்பியல்பா னடாத்தியும், ஒன்னார்த் தெறுபொருளைத் தெவ்வரிறுக்குந் திறை யென்றது, கடன்மேற் கலஞ் செறித்தும் அடர்த்து கொண்டு நேர் நடாவியும் என முடிக்க. (37 - 38) தத்தம் தொழிலில் தலைநின்று வளர்க்கும் பொருளெனும் வெறுக்கை போற்றாது நழுவவும் - அமைச்சர் முதலியோர் தத்தம் ஆள்வினையின்கண் முயன்று இடையறப் பெருக்காநின்ற பொன்னென்று சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற செல்வப்பொருள் ஈட்டினாரைப் பாதுகாவாமல் சொல்லா தேகவும், பொருள் ஈட்டினார்மாட்டுச் சிறிது தவறுண்டாயினும் அந்நிலையே தனது நிலையாமை இற்றெனக் காட்டி வாளாபோதலால் அதன்மீது ஆழ்ந்த பற்றுவைத்தல் தக்கது அன்று என்பதனை உணர்த்தவே அதற்குரிய பல பெயர்களுள் வெறுக்கப்படுவதென்னும் பொருண்மை நன்கு புலப்பட ஈண்டுப் பொருளெனும் வெறுக்கை யென்றார். ஒருவன் மிடுக்குற்றுப்பற்றிப் போற்றினும் போகூழ் வந்துற்றபோது அது நிலையாதாதலின் போற்றாது நழுவவும் என உரைத்தார். மிஞிறென்பது முதல் மாதரை யென்னுமளவும் ஒரு முடிபு. (39 - 41) மிஞிறும் தேனும் வெறிகவர் தும்பியும் கஞலிப்பண்குரல் கஞற்றுவ சுழலும் இருள்துஞ்சு மலர்ப்பொழில் மருள்சில் லோதி - மணத்த மதுக் கவர்கின்ற மிஞிறு தேன் தும்பியென்னும் வண்டினம் நெருங்கிப் பண்ணுங் குரலோசையும் கலப்பனவாய்ப் பாடிச் சுற்றுதற்கிடனான இருள் தங்கின மலர் செறிந்த பொழிலோவென மருளத்தக்க சில்லென்னுந் தலைப்பணி யணிந்த கூந்தலினையும், மிஞிறு - ஆண், தேன் - பெடை, தும்பி - வேறொரு வண்டின் சாதி. பொழிலும் எனச் சிறப்பும்மை விரித்துப் பொழிலும் மருளத்தக்க வோதி யெனினுமமையும். சில் என்பது சின்மை மென்மை யென்னும் பொருட்டு. |